விளையாட்டு

”ஆமாம் என ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா” - இந்திய அணிக்கு கிடைத்த தண்டனை!

”ஆமாம் என ஒப்புக்கொண்ட ரோகித் சர்மா” - இந்திய அணிக்கு கிடைத்த தண்டனை!

Rishan Vengai

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 186 ரன்களை எடுத்த இந்திய அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 186 ரன்களை எடுத்த இந்திய அணி, இரண்டாவது இன்னிங்க்ஸில் வங்கதேச அணியை 136 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதும், கடைசி ஒருவிக்கெட்டிற்கு 54 ரன்களை விட்டுக்கொடுத்து தோல்வியை சந்தித்தது. மிஸ் பீல்டிங், நோ-பால், கேட்ச் என கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் இந்தியா தவறவிட, அதை பயன்படுத்திகொண்ட மெஹிதி ஹாசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை நிலைத்து நின்று வங்கதேச அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்த தோல்விக்கு பிறகு பல விமர்சனங்களை சந்தித்துவருகிறது இந்திய அணி. ரோகித் சர்மா கேப்டன்சி குறித்தும், அணியில் முழுமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இருக்கையில் எதற்கு பகுதிநேர விக்கெட் கீப்பரை பயன்படுத்த வேண்டும் என்று பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பினர் ரசிகர்கள்.

இந்நிலையில் போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காததால், போட்டியின் கட்டணத்திலிருந்து 80% தொகை இந்திய அணிக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்களான மைக்கேல் கோஃப் மற்றும் தன்வீர் அகமது, மூன்றாவது நடுவர் ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது நடுவர் காசி சோஹல் ஆகியோர் குற்றச்சாட்டை சுமத்திய நிலையில், ஐசிசி விதியின் படி ஓவர்ரேட் குற்றங்களுக்காக ஒவ்வொரு வீரருக்கும் தலா 20% அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, குறைந்த ஓவர்ரேட்டில் பந்துவீசப்பட்டதை ஒப்புக்கொண்டுவிட்டதால் மேற்படி விசாரணை எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் குறைவான ஓவர் ரேட் என்றால் என்ன?

ஓவர் ரேட் என்பது ஒரு மணிநேர ஆட்டத்தில் பீல்டிங் தரப்பால் வீசப்படும் ஓவர்களின் சராசரி எண்ணிக்கையாகும்.

ஐசிசியின் விதிகளின்படி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 15 ஓவர்கள், ஒருநாள் போட்டிகளில் 14.28 மற்றும் டி20களில் 14.11 ஓவர்கள் அணிகள் பராமரிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

அடிப்படையில், ODIகளில், பந்துவீச்சு அணிக்கு 50 ஓவர்கள் ஒதுக்கீட்டை முடிக்க 3.5 மணிநேரம் வழங்கப்படுகிறது மற்றும் T20களில், அணிகள் தங்கள் 20 ஓவர்களை ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் பந்துவீசும்போது முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பந்துவீசும் அணிகள் மேறுகூறிய நிர்ணயிக்கப்பட்ட விதிகளை மீறினால், அது குறைவான ஓவர் ரேட்டைக் கொண்டதாகக் கருதப்படும், அதன் மீது தான் நிர்வாகக் குழு அபராதம் விதிக்கும். மற்றும் பல சந்தர்ப்பங்களில், தடைகளையும் விதிக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.