மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக வென்று, மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. இந்நிலையில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதன் முதல் டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு டிரினிடாட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஓப்பனர்களாக ரோகித் ஷர்மாவும் சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்களை திணறடித்தனர். 4வது ஓவரிலேயே இந்திய அணி 40 ரன்களை கடந்த நிலையில், சூர்யகுமார் 24 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் டக் அவுட் ஆக, ரிஷப் 14 ரன்களில் அவுட்டாகி நடையைக் கட்டினார். ஹர்திக் 1 ரன்னில் வெளியேற, பொறுப்பாக தனது அதிரடியை தொடர்ந்த கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதம் கடந்தார். 44 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி 64 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா வெளியேறினார். ஜடேஜா 16 ரன்களில் பெவிலியன் திரும்ப, அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் பவுண்டரி மழை பொழிய துவங்கினார்.
19 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸர், 4 பவுண்டரி விளாசி 41 ரன்களை குவித்தார் தினேஷ் கார்த்திக். இதனால் 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது இந்திய அணி. 191 ரன்களை எட்டினால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது மேற்கிந்திய தீவுகள் அணி.