விளையாட்டு

17,000 சர்வதேச ரன்களை கடந்த 7வது இந்திய வீரரானார் ரோஹித் சர்மா!

17,000 சர்வதேச ரன்களை கடந்த 7வது இந்திய வீரரானார் ரோஹித் சர்மா!

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியில் 35 ரன்களை அடித்ததற்கு பிறகு, 17,000 சர்வதேச ரன்களை கடந்த 7ஆவது இந்திய வீரர் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார், இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

இந்திய அணியின் மூத்த பேட்டரான ரோகித் சர்மா 17,000 ரன்களை பூர்த்தி செய்ததற்கு பிறகு, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, எம் எஸ் தோனி போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு பிறகு, இந்தியாவிற்காக 17,000 ரன்களை எட்டிய 6ஆவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

பார்டர் கவாஸ்கர் தொடரின் 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா, இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இன்று பேட்டிங் செய்தார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித், ஷார்ட் பாலாக வீசி அழுத்தம் கொடுத்த ஸ்டார்க்கின் அடுத்தடுத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர் விளாசிய போது 17,000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எட்டினார். பின்னர் அடுத்த 2 ஓவர்களில் குஹ்னேமன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 35 ரன்களில் வெளியேறினார் ரோகித் சர்மா.

ரோகித் சர்மாவின் ரன்களில் பெரும்பாலானவை ஒருநாள் போட்டிகளில் வந்தவை. வலது கை தொடக்க ஆட்டக்காரரான அவர், 241 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9782 ரன்கள் குவித்துள்ளார். மற்றபடி 148 டி20 போட்டிகளில் 3853 ரன்களும், 48 டெஸ்டில் 3379 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களும், டெஸ்டில் 9 சதங்களும், டி20 போட்டிகளில் 4 சதங்களும் அடித்துள்ளார். அதில் டி20 வடிவத்தில் 4 சதங்கள் அடித்த ஒரேவீரர் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 17ஆயிரம் ரன்கள் குவித்த 7ஆவது இந்திய வீரர்! ஆனால் இந்தியாவிற்காக அடித்தவர்களில் 6ஆவது வீரர் ஏன்?

இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் - 664 போட்டிகளில் 34,357 ரன்கள், விராட் கோலி - 494 போட்டிகளில் 25,047 ரன்கள், ராகுல் டிராவிட் - 504 போட்டிகளில் 24,064 ரன்கள், சவுரவ் கங்குலி - 421 போட்டிகளில் 18,433 ரன்கள், தோனி - 535 போட்டிகளில் 17,092 ரன்கள் என குவித்திருக்கும் நிலையில், ரோஹித் சர்மா - 438 போட்டிகளில் 17,000+ ரன்கள் குவித்து, இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் 6ஆவது வீரராக இடம்பிடித்துள்ளார்.

ஆனால் சர்வதேச ரன்களை பொறுத்தவரையில் சச்சின் முதல் தோனி வரையிலான பட்டியலில் வீரேந்திர சேவாக்கும் வருகிறார். வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட்டில் 17,253 ரன்களும், அதில் இந்தியாவுக்காக 16,892 ரன்களும் எடுத்துள்ளார். அவருக்கான மீதமுள்ள ரன்கள், ஐசிசி மற்றும் ஆசியா தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்காக விளையாடிய போது எடுக்கப்பட்ட எண்ணிக்கையாக இருக்கிறது.

ஓபனிங் பேட்டராக டெஸ்ட்டில் ஜொலிக்கும் ரோகித் சர்மா!

2019ஆம் ஆண்டு வரையில் ரோகித் சர்மா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டராகவே விளையாடி வந்தார். தொடக்கத்தில் அவருக்கான திறமையை வெளிக்காட்டும் விதமாக, அவருடைய இன்னிங்ஸில் எதுவும் வெளிப்படவே இல்லை. அதனால் அவர் பல போட்டிகளில் இந்திய அணிக்கான டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படாமலே இருந்தார். ஒருநாள் போட்டிகளில் 9000+ ரன்களை கடந்த ஒருவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் இருப்பது பல முன்னாள் வீரர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் ஓபனிங் வீரராக 2019ஆண்டு களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தொடக்க ஆட்டக்காரராக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து அசத்தினார். 2019 ஆம் ஆண்டில் பேட்டிங்கைத் தொடங்கியதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்பிறகு 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரோகித், 1700 ரன்களுக்கு மேல் கடந்து இந்தியாவின் அதிக ரன்களை எடுத்த வீரராக இருந்து வருகிறார். மேலும் பார்டர்-கவாஸ்கர் டிராபிகளில் சொந்த ஆடுகளம் மற்றும் வெளிநாட்டு ஆடுகளங்கள் என இரண்டிலும் முதல் 3 டெஸ்டில் சதம் அடித்த ஒரே வீரர் ரோகித் மட்டும் தான்.