விளையாட்டு

அடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் !

அடையாள அட்டை இல்லாததால் காக்க வைக்கப்பட்ட ரோஜர் பெடரர் !

webteam

அடையாள அட்டை இல்லை வெளியிலேயே டென்னிஸ் வீரர் பெடரரை வெளியிலேயே காக்க வைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். உலக அளவில் முக்கியமான வீரர்கள் பங்கேற்கும் போட்டி என்பதால் பாதுகாப்பு நடவடிக்கை கடுமையாக பின்பற்றப்படும். பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைத்து தரப்பும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். அப்படி போட்டியில் கலந்துகொள்பவர்களை எளிதில் அடையாளம் காணும் விதத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். 

அந்த அட்டையில் பெயர், புகைப்படம், அவரின் பொறுப்பு, தகவல்களை அறிய உதவும் பார் கோடுகள் இடம்பெற்றிருக்கும். அடையாள அட்டை சோதனைக்கு பிறகே யாராக இருந்தாலும் மைதானத்துக்குள்ளோ அல்லது விளையாட்டு தொடர்பான அறைகளுக்குள்ளோ அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் 20முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற  ரோஜர் பெடரரை அடையாள அட்டை இல்லை வெளியிலேயே காக்க வைத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் நடந்து வரும் பெடரரிடம் வாயிற்காப்பாளர் ஐடி கார்டை கேட்கிறார். அதனை மறந்துவிட்ட பெடரர், பயிற்சியாளரிடம் இருப்பதாக கூறிவிட்டு ஓரமாக காத்து நிற்கிறார். பலரும் பெடரரை கடந்து செல்கின்றனர். தாமதமாக வரும் பயிற்சியாளர் பெடரரின் ஐடி கார்டை காட்ட இருவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

யாராக இருந்தாலும் விதிகள் ஒன்றுதான் என்பதை இந்த வீடியோ நிரூபிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தான் இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தன் மீதான தவறை உணர்ந்து ஐடி கார்டு வரும் வரை அமைதி காத்து நின்ற பெடரரின் குணத்தை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவை குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர் தனது வேலையை சரியாக பார்த்த அந்த வாயிற்காப்பாளரையும், அமைதியாக அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த ரோஜர் பெடரரை பாராட்டியுள்ளார்.

முக்கிய போட்டிகளில் அடையாள அட்டை இல்லாததால் வீரர்கள் நிறுத்தப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக மரியா ஷெரபோவாவும் அடையாள அட்டை இல்லை என்று நிறுத்தப்பட்டார். பின்னர் அடையாள அட்டையை எடுத்து வந்து காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.