ரிஷப் பண்ட் எக்ஸ் தளம்
விளையாட்டு

”இங்க ஆள் இல்ல பாருங்க..”|வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த ரிஷப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், அந்த அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 376 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்குச் சுருண்டது.

பின்னர், 227 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இரண்டாவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்த நிலையில், இன்று மூன்றாவது ஆட்டத்தை விளையாடி வரும் இந்திய அணியில், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அபார சதம் அடித்தனர். இந்திய அணி 287/4 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. இதன்மூலம் இந்திய அணி 515 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா| ட்ரம்ப் மனைவி எழுதிய சுயசரிதை.. அடுத்த மாதம் வெளியீடு.. தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், விபத்தில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 638 நாட்கள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பிடித்த ரிஷப் பண்ட் சதம் அடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இறுதியில் அவர் 109 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். முன்னதாக, அவர் வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வங்கதேச அணியின் ஃபீல்டர்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆப்சைடு திசையில் நின்றனர். ஆனால், அவரது லெக்சைடு கவரில் ஒரு ஃபீல்டர்கூட இல்லை. இதனைக் கவனித்த ரிஷப் பண்ட், வங்கதேச கேப்டனை அழைத்து, “இங்கே பாருங்கள்... இந்த இடத்தில் நீங்கள் ஒரு ஃபீல்டரை நிறுத்த வேண்டும். இங்கே அவரைக் கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்று சொல்ல, அதைப் பார்த்த கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் அனைவருமே சிரித்துவிட்டார்கள். ரிஷப் பண்ட் குறிப்பிட்டு சொன்ன ஃபீல்டிங் பொசிஷனில் வங்கதேச கேப்டனும் ஒரு ஃபீல்டரை கொண்டுவந்து நிறுத்தி ஆச்சரியப்படுத்தினார். பண்ட் செய்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இதையும் படிக்க: ‘திருப்பதி லட்டு’ தயாரிப்பில் இவ்வளவு சுவாரஸ்ய தகவல்கள் இருக்கா? | 300 ஆண்டு வரலாறும்.. பின்னணியும்!