விளையாட்டு

தள்ளுபடி விலையில் வாட்ச்! கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த ரிஷப் பண்ட்! முழு விவரம் இதோ!

தள்ளுபடி விலையில் வாட்ச்! கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த ரிஷப் பண்ட்! முழு விவரம் இதோ!

ச. முத்துகிருஷ்ணன்

தள்ளுபடி விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் மொபைல் போன்களை தருவதாக கூறி ஹரியானா கிரிக்கெட் வீரர் மிருனாங்க் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியுள்ளார்.

சமீபத்தில் ஒரு தொழிலதிபரிடம் மலிவான விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் மொபைல் போன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக ஹரியானா கிரிக்கெட் வீரர் மிருனாங்க் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.

ரிஷப் பண்ட் மற்றும் அவரது மேலாளர் புனித் சோலங்கியிடம் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கூறி மிருனாங்க் சிங் அறிமுகமாகி உள்ளார். ஜனவரி 2021 இல், மிருனாங்க் சிங் ஆடம்பர கடிகாரங்கள், பைகள், நகைகள் போன்றவற்றை வாங்கி விற்கும் தொழிலைத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். அவர், ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்களிடம் பொருட்களை விற்றுள்ளதாக சில குறிப்புகளைக் காட்டியுள்ளார்.

ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் பைகள், நகைகளை நல்ல தள்ளுபடி மற்றும் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என்று கூறியுள்ளார். ஃபிராங்க் முல்லர் வான்கார்ட் யாச்சிங் சீரிஸ் கடிகாரத்தை வாங்க பந்த் விரும்பியுள்ளார். அதை தள்ளுபடி விலையில் வாங்க எண்ணி மிருனாங்க் சிங்கிடம் கிரேஸி கலர் வாட்ச் ஒன்றிற்கு ரூ. 36,25,120 மற்றும் ரிச்சர்ட் மில்லே கடிகாரத்திற்கு ரூ. 62,60,000 கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் 65 லட்சத்திற்கு தான் வாங்கிய ஆடம்பர கைக்கடிகாரம் மற்றும் சில நகைப் பொருட்களை மிருனாங்கிடம் ரிஷப் பண்ட் கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மொத்தமாக ரிஷப் பண்ட் வழங்கிய 1.63 கோடிக்கு பதிலாக காசோலை ஒன்றை வழங்கியுள்ளார் மிருனாங்க். அந்த காசோலை பவுன்ஸ் ஆனபோதுதான் ஏமாந்த விஷயமே தெரிய வந்துள்ளது. தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரபல சினிமா இயக்குநர் ஒருவரும் மிருனாங்கிடம் பணத்தை பறிகொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.