ரிஷப் பண்ட் எக்ஸ் தளம்
விளையாட்டு

IPL 2025|“நான் RCB-க்காக விளையாடப் போறேனா?” வைரலான தகவலுக்கு பதறிப்போய் விளக்கம்கொடுத்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை அவர் மறுத்துள்ளார்.

Prakash J

2022, டிசம்பர் 30ஆம் தேதி நிகழ்ந்த மிகப் பயங்கரமான கார் விபத்தில் இருந்து மீண்ட விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட், நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு கொஞ்சகொஞ்சமாய் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பிய ரிஷப் பண்ட், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில்கூட சென்னையில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்கூட சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலிலும் முதல் டாப் 10 இடத்திற்கு நுழைந்து தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை அவர் மறுத்துள்ளார்.

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளில் பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்குமுன்பாக, வீரர்கள் தொடர்பாக ஐபிஎல் விதிமுறைகளில் மாற்றம் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பாக கணிசமான வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். மேலும் டிரேடிங் முறையில் அணி நிர்வாகங்கள் சில வீரர்களை மாற்றிக கொள்ள முடியும். அந்த வகையில், இதற்கான பேச்சுவார்த்தைகளும் சமீபகாலமாக எழுந்துவருவதாக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிக்க: மும்பை|'மேன்ஹோல்' விபத்து.. 45வயது பெண் உயிரிழப்பு.. பின்னணியில் திருட்டுச் சம்பவங்கள்.. பகீர் தகவல்

அந்த வகையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருக்கும் ரிஷப் பண்ட், அவ்வணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஆர்சிபி அணியில் கேப்டன்ஷிப் பதவி காலியாக இருப்பதால், அதை அடையும் நோக்கத்தில் தனது மேனேஜர் வாயிலாக பெங்களூரு அணியை ரிஷப் பண்ட் தொடர்புகொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விரும்பாததால், நிர்வாகத்திடம் சொல்லி தடுத்துவிட்டதாகவும் அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. இது, இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு ரிஷப் பண்ட் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இது ஒரு பொய்யான செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இதுபோன்ற போலியான செய்திகளைப் பரப்புகிறீர்கள். மிகவும் மோசமானவர்களே, கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருங்கள். எக்காரணம் கொண்டு நம்பத்தகாத சூழலை உருவாக்காதீர்கள். இது முதல் முறையல்ல. கடைசியாகவும் இருக்கப்போவதில்லை. ஆனால், நான் இதை வெளியிட வேண்டியிருந்தது. தயவுசெய்து எப்போதும் உங்களுடைய ஆதாரங்களை சரி பார்க்கவும். ஒவ்வொரு நாளும் அது மோசமாகி வருகிறது. மற்ற அனைத்தும் உங்களைப் பொறுத்தது. இது உங்களுக்காக மட்டுமல்ல. தவறான தகவல் பரப்பும் அனைத்து நபர்களுக்குமான பதில்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2016 முதல் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, டெல்லி அணியின் அடுத்த சீசன் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலாக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!