விளையாட்டு

“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்

“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்

webteam

உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து ரிஷப் மனம் திறந்து பேசியுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தோனிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், அனுபவ வீரர் மற்றும் பினிஷர் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். சேவாக் வெளியிட்டிருந்த உலகக் கோப்பைக்கான அணியில் பண்ட் இடம்பெற்றிருந்தார். 

ஆனால், உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறாதது குறித்து ரிஷப் பண்ட் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணி தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 

இந்நிலையில், உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து ரிஷப் மனம் திறந்து பேசியுள்ளார். “உலகக் கோப்பைக்கான அணியில் நீங்கள் தேர்வு செய்யப்படாத போது, அது உங்களுக்கு பின்னடைவாகத்தான் இருக்கும். இது எனக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். தேர்ந்த வீரர்கள் இதனை எப்படி அணுக வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பியது போல் எப்போதுமே வாழ்க்கை அமையாது. நீங்கள் நினைத்தது போல் அமையவில்லை என்றால், உங்களை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொள்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்படி கடந்து போவது என்று தெரியவேண்டும். 

எந்தவொரு விமர்சனத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்வேன். போட்டியை வெற்றிகரமாக முடிப்பது என்பது முக்கியமானது. தொடர்ச்சியான போட்டிகளில் இருந்து இதனை நான் கற்றுக் கொள்வேன். அனுபவத்தில் இருந்தும், தவறுகளில் இருந்தும்தான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது. எனக்கு இப்போது 21 வயதுதான் ஆகிறது. அதனால், 30 வயது மனிதரைப் போல் யோசிப்பது என்பது கடினமானது. வரும் காலங்களில் என்னுடைய மனது வலிமையடையும். அப்போது, நிறைய பக்குவம் இருக்கும். அதற்கு கொஞ்சம் காலம் தேவைப்படும்.

சிறுவயதில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நிறைய இடங்களுக்கு சென்று விளையாடியுள்ளேன். நிறைய மக்களை சந்தித்துள்ளேன். என்னுடைய திறமையை அவ்வளவு எளிதில் பெறவில்லை. மேலும், சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ” என்று ரிஷப் பண்ட் பேசினார்.