ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பெங்களூரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக் நேற்று க்ரீஸுக்குள் வந்தபோது பெங்களூரு அணியின் வெற்றிக்கு 42 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்பட்டிருந்தது. அஷ்வினுக்கு இன்னமும் ஓவர் இருந்தது. விக்கெட் டேக்கர் சஹாலுக்கு ஓவர் இருந்தது. போல்ட், பிரசித் கிருஷ்ணா, நவ்தீப் சைனி என அத்தனை பேருமே கடைசிக்கட்டத்தில் பாய்வதற்கு தயாராக இருந்தார்கள். ஏறக்குறைய ஆட்டம் ராஜஸ்தானின் கையில் இருப்பதை போன்றுதான் இருந்தது. ஆனால், தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த நிலைமையை தலைகீழாக மாற்ற 2 ஓவர்களே போதுமானதாக இருந்தது. அஷ்வின் வீசிய 14 மற்றும் சைனி வீசிய 15 இந்த 2 ஓவர்களில் மட்டும் 37 ரன்கள் வந்திருந்தது. இதில் பெரும்பாலான ரன்களை பவுண்டரியும் சிக்சருமாக தினேஷ் கார்த்திக்கே அடித்திருந்தார். சவால்மிக்கதாக தெரிந்த சேஸிங் சுலபமானது. கடைசி 5 ஓவர்களில் 49 ரன்களை பெங்களூரு எளிதில் எடுத்துவிட்டது. தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.
தினேஷ் கார்த்திக் ஏறக்குறைய தோனிக்கு சமகாலத்திய வீரர். இருவரும் ஒரே காலக்கட்டத்தில்தான் இந்திய அணிக்குள் நுழைந்தனர். இருவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். தோனியின் அசூர வளர்ச்சி தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியிலிருந்து விலக்கி வைத்துக் கொண்டே இருந்தது. நிலையான ஒரு வீரராக இல்லாமல், காயமடைந்த வீரர்களுக்கு ரீப்ளேஸ்மெண்ட் செய்கிற வகையில்தான் பல சமயங்களில் ஆடியிருக்கிறார். பல வருடமாக கிரிக்கெட் கரியரில் பெரிய உந்துதலே கிடைக்காமல் இருந்தவருக்கு 2017 இல் இலங்கையில் நடந்த நிதாஷ் ட்ராஃபி இறுதிப்போட்டி திருப்புமுனையாக அமைந்தது. அதில், கடைசி ஒன்றிரண்டு ஓவர்களில் இறங்கி வெளுத்தெடுத்து இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுத்திருப்பார். இதன்பிறகு, மீண்டும் அவருக்கு உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பெல்லாம் கிடைத்திருந்தது. நிதாஷ் ட்ராஃபியில் அடித்த அடிதான் அவருக்கு ஐ.பி.எல் இல் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியையும் பெற்றுக் கொடுத்தது.
இத்தனை ஆண்டுகால பயணத்தில், குறிப்பாக ஐ.பி.எல் ஐ மட்டுமே எடுத்துக்கொள்வோமே. இதில், தினேஷ் கார்த்திக்கை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அணி எது? என கேட்டால், நமக்கு பதிலே தெரியாது. நிதாஷ் ட்ராஃபியில் ரோஹித் சர்மா செய்ததை போல, ஒரு ஃபினிஷராக தினேஷ் கார்த்திக்கின் திறனை முழுமையாக நம்பி அவருக்கான இடத்தை பெரிதாக எந்த அணியுமே கொடுத்தது இல்லை. ஏன், தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா அணியில் அவரே அவருக்கான இடத்தை சரியாக கொடுத்துக் கொண்டதில்லை. அந்த அணியில் பெரிய இமேஜோடு இருக்கும் ரஸலுக்கு அடுத்த இடத்திலேயே தினேஷ் கார்த்திக் இருந்தார். தினேஷ் கார்த்திக்கிற்கென்று அழுத்தம் திருத்தமாக ஒரு ரோலையும் இடத்தையும் கொல்கத்தா கொடுத்ததே இல்லை. ரஸல் எங்கே இறங்குகிறாரோ அதற்கேற்ற வகையில் தினேஷ் கார்த்திக்கின் இடம் மாறிக்கொண்டே இருக்கும். கடந்த 2 சீசன்களில் மட்டும் நம்பர் 3 இல் ஒரு முறை, நம்பர் 4 இல் நான்கு முறை, நம்பர் 5 இல் எட்டு முறை, நம்பர் 6 இல் பத்து முறை நம்பர் 7 இல் நான்கு முறை என பேட்டிங் ஆர்டரில் மேலிருந்து கீழ் வரை எல்லா இடங்களிலும் ஆடியிருக்கிறார். பெரும்பாலான சமயங்களில் ரஸலின் ஆர்டரை பொறுத்தே தினேஷ் கார்த்திக்கின் ஆர்டர் மாறியிருக்கிறது. மேலும், கொல்கத்தா அணியே ஆட்டத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமெனில் முதலில் ரஸலைத்த டிக் அடிக்கும். அவருக்கு எந்த இடம் சௌகரியமாக இருக்குமோ அதை எந்த பிரச்சனையும் இல்லாமல் வழங்கிவிடும். தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த சமயங்களிலுமே அவர் தன்னைவிட ரஸலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
இப்போது இந்த சீசனில் நிலைமையே வேறு. ரஸல் இன்னமும் கொல்கத்தாவில்தான் இருக்கிறார். ஆனால், தினேஷ் கார்த்திக் பெங்களூருவிற்கு வந்துவிட்டார். இங்கே அவருக்கே அவருக்கான அந்த ஃபினிஷர் ரோலை டூப்ளெஸ்சிஸ் நடந்திருக்கும் மூன்று போட்டிகளிலும் உறுதி செய்து கொடுத்திருக்கிறார். 'நீங்கள்தான் எங்கள் அணியின் ஃபினிஷர்' எனக்கூறி பொறுப்பை பிரதானமாக தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் சுமத்திவிட்டார். அத்தோடு அவர் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதற்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கிறார்.
பஞ்சாபுக்கு எதிரான முதல் போட்டியில் டூப்ளெஸ்சிஸும் கோலியும் அட்டகாசமாக ஆடியிருந்தனர். அவர்களே கிட்டத்தட்ட 18 வது ஓவர் வரை ஆடியிருந்தனர். கடைசி 3 ஓவர் இருக்கும்போதுதான் தினேஷ் கார்த்திக் நம்பர் 4 இல் இறக்கப்பட்டு க்ரீஸுக்குள் வருகிறார். அந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருப்பார். ஸ்ட்ரைக் ரேட் 228.
கொல்கத்தாவிற்கு எதிரான அடுத்த போட்டியில் சேஸிங்கின் போது, தினேஷ் கார்த்திக் ஏற்கனவே இறங்கிய நம்பர் 4 இல் இறங்கவில்லை. மாறாக, நம்பர் 7 இல்தான் இறக்கப்பட்டார். காரணம், அந்த போட்டியில் பெங்களூரு வேக வேகமாக விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தது. முதல் போட்டியை போன்று நம்பர் 4 இல் இறக்கப்பட்டிருந்தால் அவர் பவர்ப்ளேக்குள்ளாகவே க்ரீஸுக்குள் வந்திருப்பார். ஒரு ஃபினிஷருக்கு பவர்ப்ளேயில் என்ன வேலை இருக்கிறது? அதனால் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்த போதும் தினேஷ் கார்த்திக்கை விட குறைவான அனுபவமுள்ள வீரர்களே மேலே இறங்கினர். தினேஷ் கார்த்திக் அவருக்கான இடம் வரும் வரை காத்திருக்க வைக்கப்பட்டார். 18 வது ஓவரில்தான் உள்ளே வந்தார். அழுத்தமான சூழலில் 7 பந்துகளில் 14 ரன்கள். ரஸலின் கடைசி ஓவரில் சிக்சரையும் பவுண்டரியையும் போட்டியை முடித்து வைத்தார்.
அப்படியே நேற்றைய போட்டிக்கு வருவோம். ராஜஸ்தானுக்கு எதிராகவும் பெங்களூரு வேக வேகமாக விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனாலும் தினேஷ் கார்த்திக்கை இறக்கவே இல்லை. நம்பர் 7 இல் ஹர்சல் படேலுக்கு முன்பாக கடைசி பேட்ஸ்மேனாகத்தான் தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டார். 13 வது ஓவரில் க்ரீஸுக்குள் வந்தவர், 14-15 வது ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியிருந்தார். கடைசி வரை நின்று ஆடி போட்டியையும் வெற்றிகரமாக முடித்து வைத்தார்.
பெங்களூருவில் தினேஷ் கார்த்திக்கின் மீது வைக்கப்பட்ட அளவுக்கு வேறெந்த அணியிலும் அவர் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை. நம்பிக்கை என்பதை விட 'இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து' என்பதை பெங்களூருவும் டூப்ளெஸ்சிஸும் உணர்ந்திருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்குற்கு சரியான பொறுப்பையும் சரியான இடத்தையும் கொடுத்திருக்கிறார்கள். இங்கே வேறெந்த வீரரை சார்ந்தும் தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பு மாறவில்லை. சூழல் மட்டுமேதான் தினேஷ் கார்த்திக்கின் பொறுப்பை தீர்மானிக்கிறது. டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டும். அவர்தான் ஃபினிஷர்! இந்த தெளிவான எண்ணத்திற்கான பலனை ஆர்சிபி கடந்த மூன்று போட்டிகளிலும் அறுவடை செய்துவிட்டது. இனியும் செய்யும்!
- உ.ஸ்ரீராம்