சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரரான விராட் கோலி, மூன்றே மாதங்களில் 3 வகையாக போட்டிகளின் கேப்டன் பதவியை துறந்துள்ளார். நடந்தது என்ன?, கோலி விலகியது ஏன்? விரிவாக பார்க்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டில், ஆக்ரோஷமான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்த விராட் கோலி, அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரத்தில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கோலி. எனினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணித் தலைவராகத் தொடருவேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அண்மையில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தபோது, கோலிக்கு ஷாக் கொடுத்தது தேர்வுக் குழு. அவர் எதிர்பார்க்காத வகையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.
நவம்பரில் டி20 கேப்டன் பொறுப்பை துறந்த கோலியிடம், டிசம்பரில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி பறிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.இந்த சூழலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார் விராட் கோலி. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இழந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை என்றாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு எந்த இந்திய கேப்டனும் நிகழ்த்தாத சாதனைகளை 7 ஆண்டுகளில் படைத்தார். 68 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமையேற்று, 40 வெற்றிகளைப் பெற்றுள்ளார். 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 17 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளார்.
கோலி தலைமையிலான இந்திய அணி 2016 அக்டோபர் முதல் 2020 மார்ச் வரை, 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடித்தது. தென்னாப்ரிக்காவின் செஞ்சூரியனில் டெஸ்ட்டில் வெற்றி கண்ட முதல் ஆசியக் கேப்டன் உள்ளிட்ட சாதனைகளும் கோலியின் பட்டியலில் நீள்கிறது.அளப்பரிய சாதனைகளை தன்வசம் வைத்துள்ள கோலியின் தலைமைப் பொறுப்பு, மூன்றே மாதங்களில் 3 வகையான போட்டிகளிலிருந்தும் முடிவுக்கு வந்துள்ளது.