வினேஷ் போகத் X Page
விளையாட்டு

அரசியலில் வினேஷ் போகட்? காங்கிரஸ் சார்பாக போட்டியா? பரபரக்கும் ஹரியானா.. அச்சத்தில் பாஜக?

மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட் வரும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது கணவர், இவையனைத்தும் வதந்தி என மறுத்துள்ளார்.

Angeshwar G

எங்களுடைய போராளி

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகட், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் பதக்கம் கிடைக்காமல் தாயகம் திரும்பினார். ஆனால், அவரை நாட்டில் 140 கோடி மக்களும் கொண்டாடினர். நாட்டிற்கு திரும்பிய 50.100 கி.கிராம் தங்கம் என வினேஷ் போகட்டை உச்சி முகர்ந்தனர். விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். தீபேந்தர் ஹூடாவின் தந்தையும், ஹரியானாவின் முன்னாள் முதல்வரான பூபிந்தர் சிங் ஹூடா, எங்களிடம் பெரும்பான்மை இருந்தால் வினேஷ் போகட்டை மாநிலங்களவை எம்பியாக முன்னிறுத்தி இருப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.

வினேஷ் போகத்

அவர் தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பலாலிக்கு சென்றபோது, “பதக்கம் கிடைக்கவில்லை என்றால் என்ன? வினேஷ் போகட் எங்களுடைய போராளி” என மக்கள் கொண்டாடிய நிலையில் பலாலி நகரமே விழாக்கோலம் பூண்டது.

அரசியல் களத்தில் வினேஷ்

ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசங்களில் கிராமப் புறங்களில் காணப்படும், சமூக அமைப்பான காப் அமைப்புகள் வினேஷ் போகட்டிற்கு தங்கப் பதக்கம் கொடுப்பதாக அறிவித்துள்ளன. காப் அமைப்பு என்பது ஜாட் மற்றும் குஜ்ஜார் சமூக மக்களிடையே காணப்படும் சமூக அமைப்பாகும். பிற வடமாநிலங்களைச் சேர்ந்த காப் அமைப்புகளின் தலைவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.

ஜாட் மற்றும் குஜ்ஜார் என்ற இந்த இரண்டு சமூகங்களும் விவசாயத்தை முக்கியமான தொழிலாக கொண்ட சமூகங்கள். மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்களின்போதுகூட விவசாய அமைப்புகள் தங்களது உறுதியான ஆதரவை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில்தான், ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வினேஷ் போகட் தேர்தல் அரசியலில் களமிறங்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஒருவேளை களமிறங்கினால் பாஜக கடுமையான வாக்கு சரிவை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடர் முயற்சியில் அரசியல் கட்சிகள்

ஏனெனில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த, பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என பாஜக அல்லாத பிற கட்சிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில், வினேஷ் போகட் பதக்கம் வெல்வதில் இறுதி கட்டத்தில் நடந்த சோகமும் மக்கள் மனதில் ஆறாவடுவாக மாறியுள்ளன. இதை அறுவடை செய்ய ஹரியானா எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும்.

எனவே அவரை அரசியலில் களமிறக்குவதற்கும் அவரை சம்மதிக்க வைக்கவும் பல்வேறு அரசியல் கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று வினேஷ் முன்பே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

”விரும்பினால் நிச்சயம் இடமளிப்போம்” - காங்கிரஸ்

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகட் மற்றும் பபிதா போகட் இடையேயும், பஜ்ரங் புனியா மற்றும் யோகேஷ்வர் தத் இடையேயும் போட்டி இருக்கலாம் என்று போகட் குடும்பத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வினேஷ் போகட்டின் நெருங்கிய உறவினரான பபிதா போகட் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். வரும் தேர்தலில் பபிதா போகட் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அவருக்கு எதிராக வினேஷ் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், வினேஷின் கணவர் சோம்வீர் ரதி, “இது முற்றிலும் வதந்தி” என யூகங்களைப் புறக்கணித்துள்ளார்.

மறுபுறம் ஹரியானா சட்டப்பேர்வைத் தேர்தலில் வினேஷ் போகட்டை களமிறக்க காங்கிரஸ் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரான தீபக் பபாரியா இதுதொடர்பாக பேசுகையில், வினேஷ் போகட் போட்டியிட விரும்பினால் நிச்சயமாக வாய்ப்பு கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகட்டை எங்கள் தலைவர்கள் யாராவது அணுகி இருக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது என தெரிவித்த அவர், சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட விரும்பினால் அவரை நிச்சயமாக வரவேற்போம்,. நாங்கள் அவருக்கு இடமளிப்போம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி வினேஷ் போகட்டை சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வருவதும் குறிப்பிடத்தக்கது.