கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரில், 20 ஓவரில் 267 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்திருக்கிறது, பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.
கரீபியன் லீக் கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் தொடங் கிய போட்டியில், பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் ஜமைக்கா தல்லாஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ், பந்துகளை விளாசி தள்ளினார். அவருடன் இறங்கிய சுனில் நரேன், 20 ரன்களில் ஆட்டமிழக்க, முன்ரோ இணைந்தார் சிம்மன்ஸூடன்.
இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசியபடி இருந்தனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிம்மன்ஸ் 42 பந்துகளில் 5 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். காலின் முன்ரோ, 50 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்தார். கடைசியாக களமிறங்கிய பொல்லார்ட், தனது பங்குக்கு 17 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், இதுதான் அதிகப்பட்ச ஸ்கோர். டி20 வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் செஸ் குடியரசும் இருக்கிறது. ஆப்கான் அணி அயர்லாந்துக்கு எதிராகவும் செஸ் குடியரசு அணி, துருக்கிக்கு எதிராகவும் 278 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜமைக்கா அணியில், கேப்டன் கிறிஸ் கெய்ல், 24 பந்துகளில் 39 ரன்களும் பிலிப்ஸ் 32 பந்துகளில் 62 ரன்களும், கிளன் 34 ரன்களும் லெவிஸ் 15 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். வேறு யாரும் நின்று ஆடாததால், அந்த அணியால் 226 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், மொத்தம் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. டி-20 போட்டியில், இது இரண்டாவது அதிகபட்ச சிக்சராகும்.