பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் படிக்கல், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தபோதிலும் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி 51 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 56 ரன்கள் என அதிரடி காட்ட இறுதியாக 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் நிதானமாக விளையாடினர்.
24 ரன்களில் குவிண்டன் டிகாக் வெளியேறியபின் மும்பை அணியின் அடுத்தடுத்த விக்கெட்டுகளும் வேகமாக சரிந்தன. 17ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், ராகுல் சாஹர் ஆகியோரை வீழ்த்தி ஹர்ஷல் பட்டேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். 18.1 ஓவர்களில் மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடக்கத்தில் 57 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைகூட இழக்காத மும்பை ஐபிஎல் அணி, அடுத்த 54 ரன்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.