விளையாட்டு

“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்

“தோற்றாலும் பரவாயில்ல சார்.. நாங்க நிப்போம்” - ஆர்சிபி ஃபேன்ஸ் செண்டிமெண்ட்

webteam

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி மிகவும் மோசமான தோல்வி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க ஒரு பக்கமான போட்டியாகவே முடிந்துவிட்டது. பேர்ஸ்டோவ், வார்னர் இருவரும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் தொடங்கம் முதல் இறுதிவரை பெங்களூர் பந்துவீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசினர்.

ஆனால், பெங்களூர் அணி 35 ரன்னிற்குள் 6 விக்கெட்களை இழந்துவிட்டது. விராட் கோலி, டிவில்லியர்ஸ் என அனைவருமே சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது. ஹேண்ட்கோம்ப் அடித்த 31 ரன்களால் பெங்களூர் 100 ரன்களை கடந்தது. இறுதியில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பெங்களூர் அணியின் மொத்த ஸ்கோர், பேர்ஸ்டோவ் அடித்த 114 ரன்களைவிட ஒரு ரன் குறைவு. இதனை கூட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கினர். ஐபில் தொடரில் இதுதான் இரண்டாவது மோசமான பதிவு ஆகும். முன்னதாக, கிறிஸ் கெயில் 175 ரன்கள் குவித்த போது, புனே வாரியர்ஸ் அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 118 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது அவர்களது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது. 

பெங்களூர் அணி முதல் போட்டியில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை பதிவு செய்தது. இரண்டாவது போட்டியிலும் மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது. இன்று ஐதராபாத் அணிக்கு எதிராக மோசமான தோல்வி அடைந்துள்ளது. தொடர் தோல்வி அடைந்த பெங்களூர் அணி சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரோல் ஆனது. 

இந்தப் போட்டி குறித்து பல்வேறு விஷயங்களை வைத்து பலரும் ட்ரோல் செய்தனர். அதில் முக்கியமானது, ‘இது கிளப் மேட்ச் இல்லை’ என்பது. மும்பைக்கு எதிரான போட்டியில் அம்பயர் நோ பாலை சரியாக கணிக்காததால் ஆத்திரமடைந்த விராட் கோலி ‘இது கிளப் மேட்ச் இல்லை’ என வாதாடினார். அதனை இன்று பலரும் குறிப்பிட்டு இருந்தனர். மல்லையா பேட்டிங் செய்யும் படத்தை பலரும் பதிவிட்டு இருந்தனர். மேலும், ‘ஈ சாலா கப் நமதே’ என்ற வாசகத்தை பலரும் கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார்கள். 

இது ஒருபுறம் இருந்தால், எவ்வளவுதான் தோல்வி அடைந்தாலும் பெங்களூர் அணியை கைவிடமாட்டோம் என பல ரசிகர்கள் கூறினர். மூன்று போட்டிதானே முடிந்து இருக்கிறது இன்னும் 11 போட்டிகள் இருக்கிறது என்று சில ஆர்சிபி ரசிகர்கள் கூறினர். கோப்பையை கைப்பற்றாவிட்டாலும் போட்டியையாவது வெல்லுங்கள் என ஆர்சிபி ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.