விளையாட்டு

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாடல்: வறுத்தெடுக்கும் கர்நாடகா ரசிகர்கள் !

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாடல்: வறுத்தெடுக்கும் கர்நாடகா ரசிகர்கள் !

jagadeesh

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பாடல், அதிகளவில் இந்தி கலப்பில் இருப்பதால் கர்நாடகா மாநில ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"இந்தி தெரியாது போடா" என்ற வாசகம் அண்மையில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது. அதே வாக்கியம் கன்‌னடத்தில் "HINDI GOTHILLA HOGO" என மொழி பெயர்க்கப்பட்டு கர்நாடகாவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் தனஞ்செயா ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிரான கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்ட டிஷர்ட்டுகளை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னடர்கள், பெங்களூரு ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை பெயர்த்தெடுத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்தி திணிப்புக்கு எதிராக கொதிநிலையில் மக்கள் இருக்கும் சூழ்நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல ஆர்சிபி அணியினர் தங்களுடைய "ஆந்த்தம்" பாடலை வெளியிட்டுள்ளனர். காரணம் அதில் அதிகளவு இந்தி கலப்பு உள்ளது.

இதற்கு கடுமையான எதிர்வினைகளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆற்றி வருகின்றனர். அதில் பலர் "ஒட்டுமொத்த கர்நாடகாவும் இந்தி திணிப்பை எதிர்த்து வரும் சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை முன்னிறுத்தும் ஓர் அணி இந்தியில் பாடலை வெளியிட்டு இருக்கிறது. இது அவமானம்" என தெரிவித்து இருக்கின்றனர். சிலர் "ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு பதிலாக இந்தி என மாற்றிக்கொள்ளுங்கள்" என தெரிவித்தனர்.

சில ரசிகர்கள் இதற்கு ஆதரவும் தெரிவிக்கின்றனர் "ஆர்சிபி அணி ஒன்றும் மாநிலத்தை முன்னிறுத்தும் அணியில்லை, அது வெறும் ஒரு பிரான்சைஸ் மட்டுமே இதுபோன்ற எதிர்ப்பு முட்டாள்தனமானது" என தெரிவித்துள்ளனர். ஆனால் பல ரசிகர்கள் இந்தியில் இருக்கும் பாட்டை கன்னடத்தில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பின் காரணமாக கன்னட மொழியில் உருவான பாடலை வெளியிட்டது ஆர்சிபி அணி.