டி.என்.பி.எல், ரஞ்சி அனுபவங்களைக் கொண்ட சாய் கிஷோரை 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2020 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, மோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்களை தனது அணியிலிருந்து விடுவித்திருந்தது சிஎஸ்கே. பேட்ஸ்மேனான பில்லிங்ஸை விடுவித்திருந்த நிலையில் அவர் இடத்தை யார் நிரப்ப போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நடந்து முடிந்துள்ள ஏலத்தில் பியுஷ் சாவ்லா, ஜோஷ் ஹேசல்வுட், சாய் கிஷோர் ஆகிய பவுலர்களையும், இளம் ஆல்ரவுண்டர் சாம் கரனையும் சென்னை அணி எடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை அணி செலவழித்த அதிகபட்ச தொகையான ரூபாய் 6.75 கோடி, லெக்ஸ் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவுக்கே செல்கிறது. இந்தாண்டு ஏலத்தில் இந்திய வீரர் ஒருவருக்கு செலவழிக்கப்பட்ட அதிகபட்ச தொகையும் இதுவே. ஏற்கெனவே ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன், சாண்ட்னர் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னை அணியில் குவிந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் அப்பட்டியலில் இணைந்துள்ளது எதிர்பாராத ஒன்று.
கடந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் எடுத்து அசத்திய இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐந்தரை கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், கீழ் மத்திய வரிசையில் பேட்டிங்கிலும் அணிக்கு வலுசேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்கரனுக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலிய அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட்டை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் இவர் முதல்முறையாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. ரஞ்சிக் கோப்பை, TNPL உள்ளிட்ட போட்டிகளிலும் இடது கை சுழற்பந்து வீச்சாளராக ஜொலித்து வரும் தமிழக வீரர் சாய் கிஷோர் 20 லட்ச ரூபாய்க்கு எடுத்து சென்னை அணி அவரை ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாய் கிஷோர் முந்தைய காலங்களில் சென்னை அணிக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.