செய்தியாளர்: விக்னேஷ்முத்து
"I Have the Streets: A Kutti Cricket Story" என்ற புத்தகத்தை வெளியிட்டார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். அஸ்வின் மற்றும் பத்திரிகையாளர் சித்தார்த் எழுதியுள்ள இந்த புத்தகத்தை தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று வெளியிட்ட அஸ்வின், இந்த புத்தகத்தை நான்கு ஆண்டுகள் முயற்சிக்கு பின் எழுதி முடிந்ததாக தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், இதை தன் சுயசரிதை புத்தகமாக இல்லாமல் தன் கிரிக்கெட் தொடர்பான அனுபவங்களாக, அதையும் குட்டி ஸ்டோரிக்களாக எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் தனது கிரிக்கெட் அனுபவங்களை பரிர்ந்துள்ள அஸ்வின், “கிரிக்கெட் விளையாட்டில் சென்னையும், தமிழ்நாடும் தொடர்ந்து இந்தியாவிலிருந்தே தனியாகவே இருக்கிறது. இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல” என உரையை தொடங்கியுள்ளார்.
புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தான் இந்திய அணிக்கு தேர்வான சமயத்தில் ஹிந்தி தெரியாமல் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்தி முக்கியத்துவம் வாய்ந்தது என சூசகமாக தெரிவித்தார்.
அத்துடன் தோனியின் விக்கெட்டை வீழ்த்துவதே தான் லட்சியமாக வைத்திருந்ததையும், ஃபேஸ்புக் வாயிலாக உலகக் கோப்பைக்கு தான் தேர்வானதை தோனி கூறியதையும் நினைவுகூர்ந்தார்.
“எனது அப்பா என்னை பேட்ஸ்மேனாகதான் உருவாக்க நினைத்தார் ஆனால், நான் ஆஃப் ஸ்பின்னர், பேட்ஸ்மேன் கிடையாது என்று அப்பாவிடம் திட்டவட்டமாக கூறினேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றிய தருணம்.
ராமகிருஷ்ணபுரம் தெருவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் என்னால் மறக்கவே முடியாத நிகழ்வு. 2016 வரை தெருவில் கிரிக்கெட் விளையாடினேன்” என்று கூறிய அஸ்வின், தான் ஆஃப் ஸ்பின்னரான கதையை விவரித்தார்.