விளையாட்டு

இங்கிலாந்து சென்ற அஸ்வின் - பயிற்சி ஆட்டத்திலேயே சொதப்பும் இந்திய அணி

இங்கிலாந்து சென்ற அஸ்வின் - பயிற்சி ஆட்டத்திலேயே சொதப்பும் இந்திய அணி

சங்கீதா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய அணியின் சீனியர் வீரரும், பவுலருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியில் இணைந்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடரில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து அந்த கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக இந்திய அணி, லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதற்காக கடந்த 16-ம் தேதியே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். ஆனால் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால், இந்திய அணியுடன் இங்கிலாந்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் அவரது குவாரண்டைன் காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து இங்கிலாந்துக்கு சென்று இந்திய அணியுடன் அஸ்வின் இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டத்துக்கு முன்னதாக நடைபெற்ற செஷனில் இந்திய அணியுடன் அஸ்வின் இணைந்துள்ள புகைப்படத்தை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. இந்திய அணியின் சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஸ்வின் இணைவது அணிக்கு பலம் சேர்க்கும். இதனால் பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு இந்திய அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் துவங்கியுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமன் விஹாரி, கே.எஸ். பரத்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் சாம் இவான்ஸ் தலைமையிலான லீசெஸ்டர்ஷைர் அணியில் ரேஹான் அகமத், சாம் பேட்ஸ் (விக்கெட் கீப்பர்), நாட் பௌலீ, வில் டேவிஸ், ஜோய் எவிசன், லூயிஸ் கிம்பர், அபி சாக்கண்டே, ரோமன் வால்கர், செட்டீஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, லீசெஸ்டர்ஷைர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் செஷனில் 28 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் விராத் கோலி மற்றும் கே.எஸ். பரத் இருந்தனர். பின்னர் மழை மற்றும் மதிய இடைவேளை காரணமாக சிறிது தாமதமாக துவங்கியது. அப்போது நிதானமாக விளையாடிய இந்தக் கூட்டணி, மளமளவென ரன்களை சேர்த்தது. தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களுடன் களத்தில் உள்ளது.