19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. தன்னுடைய முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவதுப் போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர் கொண்டது. டாஸ் வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஜப்பான் அணி தடுப்பு ஆட்டம் ஆட முயன்றது. ஆனால், தொடக்க வீரர்களான துர்கேட் 1 ரன்னிலும் மற்றும் நோகுசி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஐந்து வீரர்கள் தொடர்ச்சியாக டக் அவுட் ஆனார்கள். இதில் இருவர் முதல் பந்திலே ஆட்டமிழந்தனர். இறுதிவரை யாருமே ஒற்றை இலக்கை தாண்டவில்லை. ஜப்பான் அணி 22.5 ஓவர்களில் 41 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்நோய் 8 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதேபோல், கார்திக் தியாகி 6 ஓவர்கள் வீசி 10 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஆகாஷ் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து, 42 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 4.5 ஓவர்களிலே விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் 29 (18), குஷக்ரா 13 (11) ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். 4 விக்கெட் வீழ்த்திய ரவிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.