விளையாட்டு

அப்பா இறந்த துக்கத்திலும் ஆஸி.போட்டியில் ஆடுகிறார் ரஷித்!

அப்பா இறந்த துக்கத்திலும் ஆஸி.போட்டியில் ஆடுகிறார் ரஷித்!

webteam

’என் வாழ்க்கையின் மிக முக்கியமான நபரை இழந்துவிட்டேன்’ என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், தன் தந்தையின் மரணம் பற்றி வருதத்துடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான். சர்வதேச அளவில் இவரது சுழல் பந்துவீச்சு பேசப்பட்டு வருகிறது. சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20, ஐபிஎல், பிக்பாஷ், பாகிஸ்தான் லீக் உட்பட பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். மிகக்குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஷித் கான், இப்போது அங்கு இருக்கிறார். இந்நிலையில் ரஷித் கானின் தந்தை நேற்று காலமானார். இதை மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

ரஷித் கான் ட்விட்டரில், “ என் வாழ்க்கையில் முக்கியமானவரை இழந்துவிட்டேன். என் தந்தை இனி இல்லை. வலிமையோடு இருக்க வேண்டும் என்று எப்போதும் என்னிடம் நீங்கள் சொல்வது ஏன் என இப்போது தெரிந்துவிட்டது. ஏனென்றால் இப்போது உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள மனவலிமை வேண்டும் என்றுதான் அப்போதே சொல்லி வந்திருக்கிறீர்கள்’’  எனத் தெரிவித்துள்ளார்.


 
ரஷித் கான் தந்தை மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்,  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆகியவையும் ரஷித் கான் தந்தை மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், தந்தை இறந்தாலும் ஆஸ்திரேலியாவில் இன்று நடக்கும் புத்தாண்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார் ரஷித். அவர் பங்கேற்றுள்ள அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி, இன்று சிட்னி தண்டர் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், மறைந்த தந்தைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ரஷித் ஆட வேண்டும் என்று அந்த அணி கேட்டுக் கொண்டதை அடுத்து, அவர் ஆடுகிறார்.