விளையாட்டு

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆப்கான்!

கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற ஆப்கான்!

webteam

பங்களாதேஷுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. டேராடூனில் நடந்த இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப் பற்றியது. அந்த அணியின் ரஷித்கான் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு உதவினார். 

இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் ஸ்டேனிக்‌ஷாய் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. ஷென்வாரி 33 ரன்களும் முமகது ஷசாத் 26 ரன்களும் ஸ்டேனிக்‌ஷாய் 27 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, முஷ்பிகுர் ரஹ்மான், மஹமுத்துல்லா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றியின் அருகி ல் சென்றது. கடைசி ஓவரில் ஆப்கான் வெற்றி பெற 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை ரஷித்கான் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் முஷ்பிகுர் ரஹ்மான் அவுட் ஆனார். அவர் 46 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து அரிஃபுல் ஹக் வந்தார். கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. பந்தை பவுண்டரிக்கு தூக்கினார் மஹமுத்துல்லா. ஆனால் எல்லைக் கோட்டின் அருகே நின்ற ஷபிக்குல்லா, பந்தை பிடிக்க முயன்றார். முடியாததால் பந்தைத் தடுத்து எல்லைக்கோட்டுக்குள் எறிந்தார். மீண்டும் அந்த பந்து எல்லைக்கோட்டை தாண்ட வந்தது. பிறகும் அவர் பந்தை எல்லைக்கோட்டின் உள்ளே தள்ளினார். பின்னர் அதை எடுத்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். அதற்குள் அவர்கள் மூன்று ரன்கள் எடுத்தனர்.

விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் சரியாக அடிக்க, மஹமுத்துல்லா ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்றது. எல்லைக்கோட்டின் அருகே பந்தை இரண்டு முறை தடுத்தவிதம் நடுவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் டிவி ரீப்ளேவில் பல முறை சரிபார்க்கப்பட்டது. பங்களாதேஷ் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் மஹமுத்துல்லா 45 ரன் எடுத்தார். 

இதையடுத்து மூன்று டி20 போட்டிகளையும் வென்று பங்களாதேஷை, வாஷ் அவுட் ஆக்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆட்டநாயகன் விருது முஷிபிகுர் ரஹ்மானுக்கும் தொடர் நாயகன் விருது ரஷித் கானுக்கும் வழங்கப்பட்டது.