Ranji Trophy 2024 Toppers PT
விளையாட்டு

Ranji Trophy 2024 | ரிக்கி பூய் To கிஷோர்! திரும்பி பார்க்கவைத்த டாப் 3 பேட்ஸ்மேன் & டாப் 3 பௌலர்!

ரஞ்சி டிராபி சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் பட்டியல்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பவர்கள் யார்? என்ற முழு பட்டியலை இந்த சிறப்புத்தொகுப்பில் காணலாம்.

Viyan

2024 ரஞ்சி டிராபி சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. 42வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறது மும்பை. விதர்பாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகுடம் சூடியது மும்பை. இத்தொடரில் தமிழ்நாடு அணி அரையிறுதி வரை முன்னேறியது. அரையிறுதியில் மும்பைக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது தமிழ்நாடு. இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் பட்டியல்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பவர்கள் யார்?

பேட்ஸ்மேன் #1 - ரிக்கு பூய் (ஆந்திரா)

இன்னிங்ஸ் - 13

ரன்கள் - 902

சராசரி - 75.16

50/100 - 3/4

அதிகபட்சம் - 175

பெங்கால், உபி அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் சதமடித்து ஆந்திராவின் மிகப் பெரிய நம்பிக்கையாக விளங்கினார் ரிக்கி பூய். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆந்திரா அணி காலிறுதி வரை முன்னேறக் காரணமாக இருந்தார் அவர். இன்னும் ஒரு 4 ரன்கள் அந்த காலிறுதியில் அவர் கூடுதலாக அடித்திருந்தால், ஒருவேளை அந்த அணி அரையிறுதிக்குக் கூட தகுதிபெற்றிருக்கும்.

பேட்ஸ்மேன் #2 - சச்சின் பேபி (கேரளா)

இன்னிங்ஸ் - 12

ரன்கள் - 830

சராசரி - 83

50/100 - 4/4

அதிகபட்சம் - 131

35 வயதிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் சச்சின் பேபி. அவரது 4 சதங்கள் அடித்து அசத்தியிருக்கிறார் அவர். சதமாக மாறாத 4 அரைசதங்களில் இரண்டு கூட 90+ ஸ்கோர்கள். உத்திர பிரதேசத்துக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் குறைந்தபட்சம் ஒரு அரைசதமாவது அடித்தார் அவர்.

பேட்ஸ்மேன் #3 - சடேஷ்வர் புஜாரா (சௌராஷ்டிரா)

இன்னிங்ஸ் - 13

ரன்கள் - 829

சராசரி - 69.08

50/100 - 2/3

அதிகபட்சம் - 243*

இந்த ரஞ்சி சீசனை இரட்டைச் சதம் அடித்து அற்புதமாகத் தொடங்கினார் புஜாரா. ஜார்க்கண்டுக்கு எதிரான அந்தப் போட்டியில் 243 ரன்கள் விளாசிய அவர், அடுத்த 7 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்தார். இருந்தாலும், ராஜஸ்தான் மற்றும் மனிப்பூர் அணிகளுக்கு எதிரான கடைசி இரு லீக் ஆட்டங்களில் சதம் அடித்து மீண்டும் அசத்தினார்.

பௌலர் #1 - ஆர் சாய் கிஷோர் (தமிழ்நாடு)

இன்னிங்ஸ் - 15

விக்கெட்டுகள் - 53

சராசரி - 18.52

ஸ்டிரைக் ரேட் - 43.58

சிறந்த பந்துவீச்சு - 6/99

இந்த ரஞ்சி சீசனில் 50 விக்கெட்டுகளைக் கடந்த ஒரேயொரு பௌலர் சாய் கிஷோர் தான். தமிழ்நாடு அணியை சிறப்பாக வழிநடத்தியதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தார் அவர். 6 முறை 4 விக்கெட் ஹால்கள் எடுத்த அவர், 3 முறை 5 விக்கெட் ஹாலை நிறைவு செய்தார். மும்பைக்கு எதிரான அரையிறுதியிலும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒருகட்டத்தில் தமிழ்நாடு அணியை நல்ல நிலைக்குக் கொண்டுசென்றார் கேப்டன்.

பௌலர் #2 - கௌரவ் யாதவ் (பாண்டிச்சேரி)

இன்னிங்ஸ் - 11

விக்கெட்டுகள் - 41

சராசரி - 14.58

ஸ்டிரைக் ரேட் - 31.85

சிறந்த பந்துவீச்சு - 7/49

பாண்டிச்சேரி அணிக்கு இந்த சீசன் உயிர்நாடியாக விளங்கினார் கௌரவ் யாதவ். முதல் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்தார். உத்திரகாண்ட் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலோ மொத்தம் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். மொத்தம் 11 இன்னிங்ஸ்களில் 5 முறை 5 விக்கெட் ஹால்களை நிறைவு செய்தார் அவர்.

பௌலர் #3 - அஜித் ராம் (தமிழ்நாடு)

இன்னிங்ஸ் - 13

விக்கெட்டுகள் - 41

சராசரி - 15.75

ஸ்டிரைக் ரேட் - 37.26

சிறந்த பந்துவீச்சு - 6/83

மும்பைக்கு எதிரான அரையிறுதி தவிர்த்து ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தமிழ்நாடு அணிக்கு விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டே இருந்தார் அஜித் ராம். இரண்டாவது இடது கை ஸ்பின்னராக அணியில் இருந்தாலும், அவராலும் கேப்டன் சாய் கிஷோர் போல தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. 2 முறை 5 விக்கெட் ஹால்கள் கைப்பற்றினார் அவர்.