விளையாட்டு

ரஞ்சி கோப்பை அரையிறுதி : சொதப்பிய கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே

ரஞ்சி கோப்பை அரையிறுதி : சொதப்பிய கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே

webteam

ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் கே.எல்.ராகுல் கர்நாடக அணிக்காக களமிறங்கி பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கிய ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடர் அரையிறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் மார்ச் 9ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 2வது அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா அணியை வீழ்த்தி வங்காளம் அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 29ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் தொடங்கிய போட்டியில் கர்நாடக அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த வங்காளம் அணி 92 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அனுஸ்டப் மஜும்தர் 149 (207) ரன்கள் குவித்தார். கர்நாடக அணியில் அபிமன்யூ மிதுன் மற்றும் ரோனித் மோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய கர்நாடக அணி 122 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 26 (67) ரன்களில் அவுட் ஆனார். 5வது இடத்தில் களமிறங்கிய மணிஷ் பாண்டே 12 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். வங்காளம் அணியில் இஷான் போரெல் 5 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த வங்காளம் அணி 54.4 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் சுதீப் 45 (94) மற்றும் அனுஸ்ட மஜும்தர் 41 (108) ரன்கள் சேர்த்தனர். கர்நாடக அணியில் அபிமன்யூ மிதுன் 4 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்ப கெளதம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடக அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் 2 பந்துகளில் அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராகுல் அவுட் ஆன விதமுகம், புதிதாக ஆடத் தொடங்கும் ஒரு வீரர் அவுட் ஆவதைப் போல் இன் சிங் பந்தினை எதிர்கொள்ளாமல் விட அது எல்பிடபிள்யூ ஆனது.

ஏனென்றால் ராகுல் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் வீரராக மாறியிருக்கிறார். மேலும், சதங்கள், அரை சதம், எந்த இடத்தில் களமிறங்கினாலும் நிலையான ஆட்டம் என அசத்தி வந்தார். இதனால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.


இதேபோன்று இந்திய அணிக்காக அவ்வப்போது விளையாடி வரும் மணிஷ் பாண்டே 12 (42) ரன்களில் வெளியேறினார். 55.3 ஓவர்களில் கர்நாடக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 62 (129) ரன்கள் சேர்த்தார். வங்காளம் அணியில் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியின் அடுத்த பேட்டிங் பில்லர்களாக வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கே.எல்.ராகுல் மற்றும் மணிஷ் பாண்டே போன்றோர் இந்தியாவிற்குள் நடக்கும் போட்டியிலேயே இப்படி அவுட் ஆகி சொதப்பினால், சர்வதேச தரத்திலான முக்கிய போட்டிகளில் எப்படி ஆடுவார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.