விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரானார் ரமீஸ் ராஜா

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரானார் ரமீஸ் ராஜா

jagadeesh

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகாலம் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற செய்தி ஏற்கெனவே பரவியது. இதனையடுத்து இசான் மணி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா ஆகிய இருவரும் அண்மையில் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை நியமிக்கும்படி பிரதமர் இம்ரான் கான் முன்மொழிந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக வாய்ப்புள்ள பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஜித் கானின் பெயரும் அடிபட்டிருந்தது. ஆனால் மஜித் கான், பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உறவினர் என்பதால்தான் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனது குடும்பத்துடன் எப்போதும் நல்ல உறவு வைத்திருக்கும் ரமீஸ் ராஜாவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக மஜித் கான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜாவை நியமித்து பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஸ் ராஜா செயல்படுவார்.