இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கொஞ்சக் காலம் சிறப்பாக விளையாடியவர் மும்பையைச் சேர்ந்த ரமேஷ் பவார். குண்டான தோற்றம், நீண்ட முடி, கூலிங் கிளாஸ் என ஸ்டைலிஷ் வீரராக அறியப்பட்டவர் ரமேஷ் பவார். கங்குலி தலைமயிலான ஒரு நாள் அணியில் இடம் பிடித்தவர். ஆஃப் ஸ்பின்னரான ரமேஷ் பவார் பேட்டிங் செய்வதிலும் வல்லவராக திகழந்தார்.
சில காலம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் இடம்பிடித்தவர், பின்பு அணியில் இடம்பெறவில்லை. அதன் பின் தொடர்ந்து மாநில அணிக்காக விளையாடியவர், சில காலம் கழித்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.
கடந்த மாதம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த துஷார் அரோதெ ராஜினாமா செய்தார். இதனால் பெங்களூருவில் தேசிய அகாடமியில் முகாமிட்டிருந்த மகளிர் அணிக்கு, இடைக்கால அடிப்படையில் ரமேஷ் பவார் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
நவம்பர் மாதம் உலக மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதுவரை ரமேஷ் பவார் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். மேலும் ரமேஷின் ஒப்பந்த காலத்தில், இந்திய மகளிர் அணி, செப்டம்பரில் இலங்கை டூர், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி-ன் உலக டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
இந்தியாவுக்காக 31 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரமேஷ் பவார் 163 ரன்கள் எடுத்துள்ளார், ஒரு அரை சதம் அடித்துள்ளார், மேலும் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரமேஷ் பவார் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார்.