விளையாட்டு

அஸ்வின் அரைசதம் வீண் - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

அஸ்வின் அரைசதம் வீண் - ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

JustinDurai

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான பிளே ஆஃப் கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தும் முனைப்பில் மும்பையில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில், தொடக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான ஜோஸ் பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பின்னர் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும், தேவ்தத் படிக்கல்லும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார். படிக்கல் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ், நார்ட்ஜே, சர்க்காரியா தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஸ்ரீகர் பரத் ரன் எதுவும் எடுக்காமல் நடையைக் கட்டினார். எனினும் டேவிட் வார்னரும், மிட்செல் மார்ஷூம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றனர். பந்துவீச்சைத் தொடர்ந்து பேட்டிங்கிலும் அசத்திய மார்ஷ் அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 144யை எட்டியபோது மிட்செல் மார்ஷ் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் 19ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. வார்னர் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 6ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள டெல்லி அணி, 12 புள்ளிகளுடன் தொடர்ந்து 5ஆவது இடத்தில் நீடிக்கிறது. ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது

இதையும் படிக்கலாம்: அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?