விளையாட்டு

அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?

அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?

ச. முத்துகிருஷ்ணன்

மிஸ்டர் ஐபிஎல் என்று புகழப்பட்ட ரெய்னா ஏலத்தில் விலைபோகாமல் இந்த சீசன் துவக்கத்தில் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற, சீசனின் மத்தியில் ஜடேஜாவும் தொடரை விட்டே விலகும் அறிவிப்பு வெளியானதால் சிஎஸ்கே ரசிகர்கள் அணி நிர்வாகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி. அதிக ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ள அணிகளுள் மிக முக்கியமான அணி. ஆனால் இந்த சீசன் துவக்கம் முன்பே, வீரர்கள் ஏலத்தின்போது ரசிகர்களின் வசைபாடலுக்கு ஆளானது. அதற்கு முக்கியக் காரணம் சின்னத்தல என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சுரேஷ் ரெய்னாவை அடிப்படை விலைக்கு கூட அணி நிர்வாகம் வாங்காமல் விட்டதுதான்.

அன்று ரெய்னா!

சென்னை அணியின் பக்கபலமாக 2008 ஆம் ஆண்டு துவக்க சீசனில் இருந்து விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணியின் வெற்றிப்பயணத்தில் தவிர்க்க முடியாத வீரர் ரெய்னா. சென்னைக்காக 164 போட்டிகளில் விளையாடி 4,527 ரன்களை ரெய்னா குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 32 அரை சதமும் அடங்கும். ஒற்றை வார்த்தையில் சொன்னால் “மிஸ்டர் ஐபிஎல்” என கொண்டாடப்பட்டவர்.

இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் பின்கள வரிசையில் இறங்கி விளையாடும் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கி விளையாடுவார். குறிப்பாக 2015 மற்றும் 2019 சீசனை தவிர அனைத்து சீசனிலும் சென்னைக்காக 400 ரன்களுக்கு மேல் ரெய்னா குவித்துள்ளார். அதில் மூன்று சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபடுவதோடு ஃபீல்டிங்கிலும் ரெய்னா அதகளம் செய்வார். கடினமான கேட்சுகளையும் எளிதாக பிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவார். சில சமயங்களில் மெயின் பவுலர்கள் ரன்களை அள்ளிக் கொடுக்கும் போது பார்ட் டைம் ஸ்பின்னராகவும் அசத்துவார். ரன்களை சிக்கனமாக வழங்கி விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

இப்படி தோனியின் சி.எஸ்.கே படையில் படை தளபதியாக ஐபிஎல் தொடர் ஆரம்பமான நாள் முதல் ஜொலித்தவர் ரெய்னா. என்னதான் கடந்த சீசனில் சரியாக விளையாடாத போதும், அவர் இல்லாத சென்னை அணியை எந்தவொரு சென்னை ரசிகரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். கடந்த சீசனில் பாதியிலேயே ரெய்னா சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பிய நிலையில், இந்த சீசனில் ஏலத்தில் அவரை சென்னை நிர்வாகம் எடுக்காமல் விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முதல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களை அடிப்படை விலைக்கே ஏலம் விடுவார்கள். அப்போதும் சென்னை அணி மௌனத்தை பரிசளிக்க, சென்னை அணி ரெய்னா இல்லாமல் களமிறங்க முடிவு செய்திருப்பது புரியவந்தது. உள்ளூர் போட்டிகளில் கூட அவர் விளையாடாமல் இருந்தது அணி அவரை ஏலத்தில் எடுக்காததற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அவை எதுவும் அணி நிர்வாகம் மீதான விமர்சனங்களை தடுக்க போதுமானதாக இல்லை.

இருந்தபோதும் ரெய்னா இதுகுறித்து தனது அதிருப்தியை எங்கும் வெளிப்படுத்தவில்லை. வீரரிலிருந்து வர்ணனையாளராக அவதாரம் எடுத்த ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார். அவரது ட்விட்களே சிஎஸ்கே மீதான அவரது அளவுகடந்த பாசத்திற்கு ஆதாரம்.

இன்று ஜடேஜா!

இந்த சீசன் துவங்கும் முன் ஜடேஜா என்றால் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவர்., சென்னையின் நம்பிக்கை நட்சத்திரம்., சீசன் துவங்கும்போது அவரது மணி மகுடத்தில் இன்னொரு இறகாக செருகப்பட்டது. அது சென்னை அணியின் கேப்டன்! தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, ஜடேஜாவை புதிய கேப்டனாக அறிவித்தது அணி நிர்வாகம். இறகாக செருகப்பட்டது தன்னுடைய இயல்பாக திறமை மீது வைக்கப்பட்ட பாராங்கல்லாக மாறும் என அப்போது அவர் நினைத்திருக்கமட்டார்.

கேப்டன் பதவி ஜடேஜாவுக்கு வந்தபின் அவரது இயல்பான ஆட்டமும் தலைகீழாக மாறியது. கூடவே சென்னையும் ஆட்டம் கண்டுவிட்டது. 6வது இடத்தில் இறங்கும் ஜடேஜா 14,15வது ஓவர்களில் இறங்குமளவு மோசமாக சென்னை விளையாடியது. கேப்டன் பதவி தரும் பதற்றம், டாப் ஆர்டரின் சொதப்பல், டெத் ஓவரின் இயல்பான அழுத்தம் என எல்லாம் ஒரே கோட்டில் இணைய, ஜடேஜாவின் மாயாஜால ஆட்டம் க்ளீன் போல்ட்!

ஆங்கர் இன்னிங்ஸை கூட சரிவர ஆடத் திணறும் அளவு ஜடேஜாவின் ஆட்டம் சொதப்பலை சந்தித்து இருந்தது. 10 ஆட்டங்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் ஜடேஜா. கேட்சுகளை பிடிப்பதில் வல்லவரான ஜடேஜா இந்த சீசனில் பல்வேறு கேட்சுகளை களத்தில் கோட்டைவிட்டார். ஜடேஜாவா இது என வியக்கும் அளவிற்கு அவரது ஃபீல்டிங் சென்று இருந்தது.

இந்நிலையில் தனது இயல்பான ஆட்டத்தை விளையாடப் போவதாக ஜடேஜா அறிவித்து, மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்தது. துவக்கம் முதலே தோனி கேப்டனாக இருந்திருந்தால், ஜடேஜா தெளிவாக தன் இயல்பான ஆட்டத்தை ஆடியிருப்பார் என விமர்சனங்கள் எழுந்தன. தோனி கேப்டனாக மாறியது சென்னை மெல்ல வெற்றிப் பயணத்திற்கு நகரத் துவங்கியது.

ஆனால் ஜடேஜாவால் தனக்குள் இருந்த ஆல் ரவுண்டரை கண்டு அடைய இயலவில்லை. அதற்குள் ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சற்றே கடினமில்லாத ஒரு கேட்சைப் பிடிக்க முயற்சி செய்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்தே விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?

சென்னை அணி நிர்வாகம் ஒரு வீரருக்கு 2 போட்டிகளில் வாய்ப்பளித்துவிட்டு சரியாக ஆடவில்லை என்றால் உடனே பெஞ்சில் உட்கார வைக்காது. போதுமான அளவு வாய்ப்பை அளிக்கும். சென்னை அணிக்கு ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் அணியுடன் அதே பற்றோடு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ஜடேஜா விஷயத்தில் சென்னை நிர்வாகம் என்ன திட்டமிடலில் இவ்வளவையும் செய்தது என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

ரெய்னா, ஜடேஜா என தொன்று தொட்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர்கள், தற்போது அணியால் நடத்தப்பட்ட விதம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் தரப்பிலும் அதிருப்தியான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கி விட்டது. தோனியை விட அதிக தொகைக்கு ஜடேஜாவை தக்கவைத்த நிர்வாகம், அவர் மீதான அழுத்தத்தை குறைப்பதற்கான செயலை சீசனின் துவக்கத்திலேயே செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் சென்னையும் பிளே ஆஃப் வாய்ப்பில் முன்னேற துவங்கியிருக்கும். ஜடேஜாவும் பொறுப்புணர்ந்து இயல்பான ஆட்டத்திற்கு திரும்பியிருப்பார். ஆனால் மொத்த சீசனும் கைவிட்டு போன பின் கேப்டன் மாற்று அறிவிப்பை சிஎஸ்கே வெளியிட்டது. எப்போதும் மிகச் சரியாக அணித் தேர்வை முன்னெடுக்கும் சிஎஸ்கே நிர்வாகம், தனது கேப்டன் தேர்வில் கண்ணாமூச்சி ஆடாமல் இருந்திருந்தால் ஜடேஜாவுக்கு காயம் கூட ஏற்படாமல் போயிருக்கலாம்!