விளையாட்டு

மழைக்கே இன்சூரன்ஸ் போட்ட ஐசிசி ! போட்டிகள் ரத்தானாலும் பணத்துக்கு பங்கமில்லை !

மழைக்கே இன்சூரன்ஸ் போட்ட ஐசிசி ! போட்டிகள் ரத்தானாலும் பணத்துக்கு பங்கமில்லை !

webteam

உலகக் கோப்பை போட்டிகள் மழையால் ரத்தானாலும் ஐசிசிக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நடப்பு உலக தொடரில் இந்தியா-நியூசிலாந்து இடையேயான நேற்றையை போட்டி மழையால் ரத்தானது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்றையை போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மழை குறுகிட்டதால் ஆட்டத்தில் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்தானது. 

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் மழையால் ரத்தானால் ஐசிசிக்கு நஷ்டம் ஏற்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் ஐசிசி மழைக்காக காப்பீட்டு திட்டத்தை எடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி மழையால் போட்டி ரத்தானால் ரசிகர்களுக்கு ஐசிசி திரும்ப செலுத்தவேண்டிய டிக்கெட் கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும். இதனால் ஐசிசிக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படாது. 

மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்பி தருவதற்கு ஐசிசி விதிகளை அமைத்துள்ளது. அதன்படி போட்டியில் ஒரு பந்துகூட போடாமல் ரத்தானால் அல்லது 15 ஓவர்கள் வரை போட்டி நடந்து ரத்தானால் டிக்கெட் கட்டணத்தின் முழு தொகையும் திரும்பி தரப்படும். இதே போட்டியில் 15 ஓவர்கள் முதல் 29.5 ஓவர்கள் வரை போட்டி நடந்தால் டிக்கெட் கட்டணத்தில் ஒரு பாதி திரும்பி தரப்படும். ஆட்டத்தில் 30 ஓவர்கள் நடந்தால் டிக்கெட் கட்டணம் திரும்பி செலுத்தப்பட மாட்டாது.