விளையாட்டு

இந்திய டி20 அணியில் இடம் பிடித்த ஆனந்தத்தில் அதிரடி ஆட்டமாடிய தெவாட்டியா!

EllusamyKarthik

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதன் மூலம் லைம் லைட்டுக்குள் வந்தவர் ஆல் ரவுண்டர் ராகுல் தெவாட்டியா. 27 வயதான அவர் ஹரியானவை சேர்ந்தவர். கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 255 ரன்களை குவித்திருந்தார். டொமெஸ்டிக் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டக் அலி கோப்பை தொடர்களில்  விளையாடி வருகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அந்த தொடருக்கான 19 வீரர்கள் அடங்கிய இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் ராகுல் தெவாட்டியா. இந்திய அணிக்காக விளையாட முதல்முறையாக தேர்வாகியுள்ளார் அவர்.  தற்போது ஹரியானா அணிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வருகிறார். 

கொல்கத்தாவில் சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் 39 பந்துகளில் 73 ரன்களை குவித்து மிரட்டியுள்ளார். அதில் 4 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். அந்த ஆட்டத்தின் மூலம் தன்னை இந்திய அணிக்கு தேர்வு செய்தது வொர்த்து (மதிப்பு) தான் என்பதை நிரூபித்துள்ளார் அவர்.