விளையாட்டு

இது டிராவிட் மனது: விட்டுக்கொடுத்த இந்திய ’சுவர்’, ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!

இது டிராவிட் மனது: விட்டுக்கொடுத்த இந்திய ’சுவர்’, ஏற்றுக்கொண்ட பிசிசிஐ!

webteam

ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டதை அடுத்து ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற அணி நிர்வாகிகளுக்கான பரிசுத் தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மாற்றிக் கொண்டது. 

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட். ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் நிர்வாகிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகையை அறிவித்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சம், வீரர்களுக்கு தலா, ரூ. 30 லட்சம், பவுலிங் கோச் பரஸ் மம்பரே, பீல்டிங் கோச் அபய் சர்மா மற்றும் அணி நிர்வாகிகளுக்கு தலா ரூ.20 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக பரிசுத் தொகை அறிவித்ததை ராகுல் டிராவிட் விரும்பவில்லை. இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்திடம், ‘ஜூனிய உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒவ்வொருவரும் வெற்றிக்காக உழைத்துள்ளனர். இதனால் அனைவருக்கும் சமமாக பரிசுத் தொகைப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதற்காக எனது பரிசுத் தொகையை கூட விட்டுத்தருகிறேன்’ என்று கூறியிருந்தார்.

டிராவிட்டின் இந்த மனதைக் கண்டு நெகிழ்ந்த கிரிக்கெட் வாரியம், அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டது. தற்போது பரிசுத் தொகை விவரங்களை மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, டிராவிட் உட்பட அணியின் மற்ற பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அதோடு இந்த அணியை நீண்ட நாட்களாக பயிற்சி அளித்து தயார் செய்து வந்த நிர்வாகிகளையும் பிசிசிஐ இந்த பரிசுத் தொகையில் உள்ளடக்கியுள்ளது.