விளையாட்டு

"அயர்லாந்தில் என் பெட்டியைக் காணோம்” - பழைய நினைவில் மூழ்கிய இஷாந்த் ஷர்மா

"அயர்லாந்தில் என் பெட்டியைக் காணோம்” - பழைய நினைவில் மூழ்கிய இஷாந்த் ஷர்மா

PT

ராகுல் டிராவிட்டுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் மயங்க் அகர்வாலுடன் உரையாடிய இஷாந்த் ஷர்மா, கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டுடன் தான் இந்திய அணிக்காக விளையாடிய முதல் போட்டியின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர்,“ அயர்லாந்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் முதலில் நான் தேர்வாகவில்லை. அதே போல் நான் இங்கிலாந்தில் நடைபெற இருந்த ஒரு நாள் போட்டியிலும் தேர்வாக வில்லை.

மாறாக இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தேர்வாகியிருந்தேன். எனக்கு அப்போது 17 வயது இருக்கும். இது குறித்த எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கு இல்லாததால் நான் எனது அறையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அயர்லாந்திலிருந்து தொலைப்பேசி வாயிலாக எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் “ நான் அயர்லாந்தில் நடைபெறும் ஒரு நாள் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் அயர்லாந்தில் குளிர் கடுமையாக இருப்பதாகவும் தோனி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் குளிரால் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

இதனையடுத்து அயர்லாந்துக்கு விமானம் மூலம் சென்றேன். அயர்லாந்து விமான நிலையத்திற்கு வந்த நான் எனது மேலாளரைத் தொடர்பு கொண்டு என்னுடன் கொண்டுவந்த பெட்டியைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அவரோ பெட்டியானது நேரடியாக நீங்கள் தங்கும் அறைக்கே வந்து விடும் என்றார்.

ஆனால் விமானநிலையத்தில் பிற பயணிகள் கொண்டு வந்த பெட்டிகளுடன் எனது பெட்டி கலந்ததால் குழப்பம் ஏற்பட்டு பெட்டி எனது அறைக்கு வர வில்லை. பயிற்சிக் களத்தில் எல்லோரும் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். நானோ ஒரு ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ட்ராவிட் “ நீ பயிற்சி செய்ய வில்லையா” எனக் கேட்டார். நான் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.


அதனைப் பார்த்த அவர் “என்ன” எனக் கேட்டு விட்டுச் சிரித்தார். அதன் பின்னர் நடந்த விஷயத்தைக் கூறினேன். அதற்கு அவர் ”அப்படியானால் நீ எப்படி போட்டியில் விளையாடுவாய்” எனக் கேட்டார். நான் அதிர்ந்து போனேன். இறுதியாக ஜாகீர் கானின் காலணிகளை வாங்கி எனது முதல் ஒரு நாள் போட்டியை விளையாடினேன்” என்று பேசியுள்ளார்.