விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பதக்க நம்பிக்கை ராஹி சர்னோபாத்

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் பதக்க நம்பிக்கை ராஹி சர்னோபாத்

JustinDurai

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக இருப்பவர்களில் ஒருவர் ராஹி சர்னோபாத். அவரது வெற்றி ஓட்டத்தில் சில பகுதிகள் இங்கே.. 

25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்காக புதிய வரலாற்றை எழுதியவர். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம், அந்தப் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை வசப்படுத்தியவர். ராஹி சர்னோபாத்தின் கண்கள் இப்போது டோக்கியோவில் பதக்கத்தை இலக்காகக் கொண்டு குறிபார்க்கின்றன.

30 வயதாகும் ராஹி சர்னோபாத், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர். துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற அவரின் சிறுவயது கனவு, பல்வேறு களங்களிலும் நனவாகியிருக்கிறது. 2008-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அவர் பதக்க வேட்டையைத் தொடங்கினார். அந்த ஆண்டு புனேவில் நடைபெற்ற காமன்வெல்த் ஜூனியர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் அவர். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், 2012-ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், பிரிஸ்டல் பிரிவில் உலகக்கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை எட்டினார். சர்வதேச தரநிலையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராஹி சர்னோபாத், 2019ஆம் ஆண்டு ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கத்தை தமதாக்கினார். இதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். இப்போது டோக்கியோவிலும் தங்கம் வெல்லும் உத்திகளை வகுத்துக் கொண்டிருக்கிறார் ராஹி சர்னோபாத்.