விளையாட்டு

நடராஜனை வர சொல்லுங்க! - கோப்பையை கொடுத்து நெகிழ வைத்த ரஹானே

நடராஜனை வர சொல்லுங்க! - கோப்பையை கொடுத்து நெகிழ வைத்த ரஹானே

jagadeesh

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின்பு வழங்கப்பட்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தான் வாங்கிய பிறகு நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் இந்திய கேப்டன் ரஹானே.

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதனையடுத்து டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று தருணத்தை பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜன் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

இந்த ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் தொடக்கத்தில் டி20 அணிக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டார் நடராஜன். அதன்பின்பு ஒருநாள் அணியில் இடம் பிடித்து சிறப்பாக பந்துவீசி அசத்தினார். அதன் பின்பு இந்திய டெஸ்ட் அணிக்கு நெட் பவுலராக மட்டுமே இருந்தார் நடராஜன். ஆனால் எதிர்பாராதவிதமாக உமேஷ் யாதவ் மற்றும் பும்ரா காயமடைந்த காரணத்தின் காரணமாக அவரை அணியில் சேர்த்தது நிர்வாகம்.

இதன் பலனாக நான்காவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டி20 தொடரை இந்திய அணி வெற்றிப்பெற்றப் போது ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது நடராஜன் குறித்து பெருமையாக பேசிய பாண்ட்யா. அவரது விருதை நடராஜனிடம் கொடுத்து பெருமைப்படுத்தினார். விராட் கோலியும் கோப்பையை நடராஜனிடம் கொடுத்து நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

அதேபோல ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் வெற்றிக்கு பின்பு கேப்டன் ரஹானேவிடம் பார்டர்-கவாஸ்கர் கோப்பை வழங்கப்பட்டது. ரஹானே அந்தக் கோப்பையை பெற்றுக் கொண்ட பின்னர் சக வீரர்களை மேடைக்கு அழைத்தார். அப்போது, நடராஜனிடம் கோப்பையை கொடுத்தார். இந்த நெகிழ்ச்சியான வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.