காயம் காரணமாக விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து விலகினாா் ரபேல் நடால்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகிறது. காலிறுதியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்த போட்டியில் நடால் 3-6, 7-5, 3-6, 7-5, 7(10)-6(4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். இந்த போட்டியின்போது வயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் ரபேல் நடால் சிறப்பாக விளையாட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இச்சூழலில் இன்று நடைபெற உள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸை எதிர்த்து நடால் ஆடுவதாக இருந்தது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரபேல் நடால், நடப்பு விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
36 வயதான நடால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 22 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டில் இரு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை அவா் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: 'ஓய்வெடுக்க கடற்கரையில் உட்காருங்கள்'- விராட் கோலிக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்