ரஃபேல் நடால் எக்ஸ் தளம்
விளையாட்டு

டென்னிஸ் உலகில் 20 ஆண்டுகள் | ”இதுதான் என் கடைசிப் போட்டி..” - ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்!

Prakash J

டென்னிஸ் உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால். 38 வயதாகும் ரஃபேல் நடால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் களத்தில் போராடிவரும் ரஃபேல், பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டியே தாம் விளையாடும் கடைசி போட்டி என அறிவித்துள்ளார். அவருடைய, இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ரபேல் நடால் ஓய்வு குறித்த செய்திகள் அடுத்தடுத்து வெளியானவண்ணம் இருந்த நிலையில், இன்று ரஃபேல் நடால் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!

முன்னதாக தொடர் காயங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ரஃபேல் நடால் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தி இருந்தார். இதையடுத்து, அவரது ஓய்வு குறித்து தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நடப்பு பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில்கூட இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியை தழுவி பதக்க வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் களத்தில் கோலோச்சி வரும் ரஃபேல் நடால், 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார். 14 பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் சேர்த்து மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலக்கியத்திற்கான நோபல் பரிசு| தென்கொரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு.. யார் இந்த ஹான் காங்?