இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது போட்டியில், தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, 45.1 ஓவரில் 251 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் டி காக் 94 ரன் விளாசினார். கேப்டன் டுபிளிசிஸ் 57 ரன்னும் ஹென்ரிக்ஸ் 29 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை தரப்பில் திசாரா பெரேரா 3 விக்கெட்டும் மலிங்கா, டி சில்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
(நிகிடி)
அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமானப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. அந்த அணி 32.2 ஒவரில் 138 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 113 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகப்பட்சமாக ஓஷாடோ பெர்ணாண்டோ 31 ரன் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டும் நிகிடி, நோர்ஜே, இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றியை அடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.