விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்

rajakannan

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் நாட்டைச் சார்ந்த உலக சாம்பியன் நோஜோமி ஒகுஹரா-வை எதிர்க்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார். இருப்பினும் இரண்டாவது செட்டை 11-21 என்ற புள்ளிகளில் இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் சமபலத்துடன் விளையாடினர். இறுதியில் தனது முழு பலத்துடன் விளையாடி 21-18 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றியை தன்வசப்படுத்தினார். இந்த போட்டியில் ஓகுஹாராவை வீழ்த்தியதன் மூலம் உலக பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளார்.

உலகத் தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, இந்த ஆண்டு கைப்பற்றும் 2-வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். மேலும் கொரியன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். கொரிய ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பிவி.சிந்துவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.