விளையாட்டு

சஹா சரவெடி: பஞ்சாப் வெற்றிக்கொடி

சஹா சரவெடி: பஞ்சாப் வெற்றிக்கொடி

webteam

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. அந்த அணியின் சஹா 93 ரன்கள் குவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
பஞ்சாப் அணிக்கு இது வாழ்வா-சாவா ஆட்டம் என்பதால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்திலும் விருத்திமான் சஹாவும் அதிரடியாக ஆடினர். ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால், பந்து பவுண்டரிகளை அடிக்கடித் தொட்டது.
கப்தில் 36 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேப்டன் மேக்ஸ்வெல் 47 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) , ஷான் மார்ஷ் 25 ரன் (16 பந்து, 2 சிக்சர்) என எடுத்து அவுட் ஆக, சஹா மட்டும் நிலைத்து நின்று சாகசம் புரிந்தார். அவர் 55 பந்துகளில், 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 93 ரன் எடுக்க, அணியின் ஸ்கோர் 230 ரன்களை எட்டியது.
இந்த சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது.

பின்னர் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மன்ஸ் 59 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 38 ரன் (23 பந்து, 7 பவுண்டரி), பொல்லார்ட் 50 ரன் (24 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர்.
பஞ்சாப் தரப்பில் மொகித் ஷர்மா 2 விக்கெட்டும், சந்தீப் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், மேக்ஸ்வெல், ராகுல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். விருத்திமான் சஹா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணி நீடிக்கிறது.