விளையாட்டு

"பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க" புஜாராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

"பொறுமைய ரொம்ப சோதிக்காதீங்க" புஜாராவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

jagadeesh

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் தூண் புஜாரா 81 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் இசாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், அஷ்வின் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்தி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆனால் பிருத்தி ஷா வெறும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதேசமயம் நிதானமாக ஆடிய மயங்க் அகர்வால் அரை சதத்தை கடந்து ஆட்டமிழந்தார். இதில் மிக மிக நிதானமாக விளையாடிய புஜாரா 81 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் எடுத்தார். தேனீர் இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ட்ரண்ட் போல்ட் பந்து வீச்சில் "க்ளீன் போல்ட்" ஆகி அவுட்டாகி வெளியேறினார். புஜாரா எப்போதும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ப்பவர் என்றாலும் இன்றைய ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கடுப்பாக்கியுள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #Pujara என்ற ஹேஷ்டேக்கில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் "புஜாரா பவுலர்களின் பொறுமையை மட்டும் சோதிக்கவில்லை, கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்" என்று கலாய்த்துள்ளனர். புஜாராவால்தான் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியும், அவரால் முடிந்ததை செய்தார் என்று சில ரசிகர்கள் பாசிட்டிவ் கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். நல்லவேளை டி20 போட்டிகளில் புஜாரா விளையாடுவதில்லை என்றும் சிலர் நக்கலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.