விளையாட்டு

அடிவாங்கியே அரைசதம்- சுவராக காத்து நின்ற புஜாரா!

அடிவாங்கியே அரைசதம்- சுவராக காத்து நின்ற புஜாரா!

jagadeesh

விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்ற விரக்தியில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய புவுன்சர் பந்துகளை உடலில் வாங்கியும் பொறுமையுடன் விளையாடியும் அரைசதமடித்தார் புஜாரா.

காபா டெஸ்ட் போட்டி 5 ஆம் நாள் ஆட்டத்தில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார். ஆனால் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா ஆஸி பவுலர்களின் பந்துவீச்சை பெரிதும் சோதித்தார். புஜாராவும், சுப்மன் கில்லும் ஆஸி பவுலர்களுக்கு தண்ணி காட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ஆஸி பவுலர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது புஜாராதான். எப்படி பந்துவீசினாலும் புஜாராவை ஆட்டமிழக்க முடியவில்லை என்ற விரக்தியில் பவுன்சர்களை வீசினார்கள். அதுவும் ஹேசல்வுட் வீசிய பவுன்சர் புஜாராவின் ஹெல்மெட்டை பதம்பார்த்தது, உடைந்தது.

பின்பு பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து புஜாராவின் விரல்களில் கடுமையான காயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்பும் சில பவுன்சர்களை திறன்பட சமாளித்தார் புஜாரா. ஆஸியின் கடுமையான பவுன்சர்களை பொறுமையாக கையாண்டு 196 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார் புஜாரா. இப்போதும் களத்தில் புஜாராவும், ரிஷப் பன்ட் இணைந்து வெற்றி இலக்கை நோக்கி நகரந்து வருகின்றனர்.