விளையாட்டு

டிராவிட்டின் சாதனையை முறியடித்த புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ்

டிராவிட்டின் சாதனையை முறியடித்த புஜாராவின் மாரத்தான் இன்னிங்ஸ்

webteam

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 500 பந்துகளை எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்தார். 

இதற்கு முன்னதாக 495 பந்துகளை ராகுல் டிராவிட் எதிர்கொண்டிருந்ததே, இந்திய பேட்ஸ்மேன் எதிர்கொண்ட அதிகபட்ச பந்துகளாக இருந்து வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் குவித்த புஜாரா, அதற்காக 525 பந்துகளை எதிர்கொண்டார். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓகஃபே பந்துவீச்சில் 215 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்களை புஜாரா எடுத்தார். அதேநேரம் மற்ற பந்துவீச்சாளர்கள் வீசிய 310 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா, அதில் 137 ரன்கள் எடுத்தார். கடந்த 1964ல் ஓல்ட் ட்ராஃபோர்டு மைதானத்தின் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் கென் பேரிங்டன் 624 பந்துகளை எதிர்கொண்டு 256 ரன்கள் எடுத்தார். இதுவே ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 500 பந்துகளை வீரர் ஒருவர் இதற்கு முன்பாக சந்தித்த நிகழ்வாகும். 

முதல் இன்னிங்ஸில் மொத்தம் 210 ஓவர்களை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டனர். டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்கள் ஓவர்களை எதிர்கொண்ட வரிசையில் கடந்த 55 ஆண்டுகளில் 4ஆவது நீண்ட இன்னிங்ஸ் இதுவாகும். கொழும்பு மைதானத்தில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 222.5 ஓவர்களை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடைசியாக 1985-86ம் ஆண்டு சீசனில் அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 202 ஓவர்கள் பேட்டிங் செய்திருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடைசியாக 200 ஓவர்களுக்கு மேலாக பேட்டிங் செய்த அணி தென்னாப்பிரிக்கா ஆகும். கடந்த 1994ம் ஆண்டில் டர்பனில் நடந்த போட்டியில் இதனை தென்னாப்பிரிக்க வீரர்கள் நிகழ்த்தியிருந்தனர். 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓகஃபே 77 ஓவர்கள் வீசினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரே பந்துவீச்சாளர் 75 ஓவர்களுக்கு மேலாக பந்துவீசியிருந்த நிகழ்வு கடைசியாக 2001ம் ஆண்டு நடந்தது. புலவாயோ நகரில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரே பிரைஸ் 75 ஓவர்களுக்கு மேலாக பந்துவீசியிருந்தார்.