விளையாட்டு

"உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

"உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

jagadeesh

மகளிர் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்திய மகளிர் அணியை எண்ணி பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இறுதிப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் "அனைத்து போட்டிகளையும் வென்றதற்காக கிடைத்த பரிசு இது. இதே வெற்றி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியிலும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விவிஎஸ் லக்ஷ்மன் "அரையிறுதிப் போட்டியை காண ஆர்வமாக இருந்தோம், இருந்தாலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு வாழ்த்துகள்" என பாராட்டியுள்ளார்.

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா இன்று களமிறங்கியது. குரூப் சுற்றுப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற அணி என்ற சிறப்போடு அரையிறுதியில் அடியெடுத்து வைத்தது இந்தியா.

அரையிறுதிப் போட்டி நடைபெறும் சிட்னி நகரில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. சிட்னி நகரில், இப்போட்டி இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் போட்டி தாமதமானது. தொடர்ந்து மழையின் குறுக்கீடு இருந்ததால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டதால், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.