விளையாட்டு

புரோ கபடி லீக்: முதல் முறையாக அரையிறுதி சென்ற தமிழ் தலைவாஸ், போராடி தோல்வி!

புரோ கபடி லீக்: முதல் முறையாக அரையிறுதி சென்ற தமிழ் தலைவாஸ், போராடி தோல்வி!

Rishan Vengai

புரோ கபடி லீக்கின் அரையிறுதி போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், வெற்றிப்பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரின் 9ஆவது சீசன், இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே பெங்களூரு அணி மீது ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்டத்தில் எந்த நிலையிலும் பெங்களூரு அணியால் முன்னிலை பெற முடியவில்லை. அபாரமாக ஆடிய ஜெய்ப்பூர் 40க்கு 29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 3வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி!

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது இறுதி அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், புனேரி பல்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. இதனால் இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. ஆட்டம் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கிய போது 39 க்கு 37 என்ற கணக்கில் புனேரி பல்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

ஏன் தமிழ் தலைவாஸ் அணிக்கு இது முக்கியமான தொடர்!

2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 8 சீசன்களாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், ஒருமுறை கூட அரையிறுதியில் கூட தமிழ் தலைவாஸ் அணி முன்னேறி பங்கேற்றதில்லை. ஆரம்பகால தொடர்களில் கடைசி இடத்தையே பெற்றிருந்த தமிழ் தலைவாஸ், படிப்படியாக அடுத்தடுத்த சீசன்களில் முன்னேறி அரையிறுதி தகுதிசுற்று போட்டிகளில் விளையாடிய போதும் அரையிறுதிக்கான வாய்ப்பை பெறமுடியவில்லை.

இந்நிலையில் ஸ்டார் ரெய்டர்களான நரேந்தர் மற்றும் கேப்டன் அஜிங்க்யா பவர் இருவரின் உதவியால் இந்த 9ஆவது சீசனில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 சீசன்களுக்கு பிறகு இந்த சீசனில் அரையிறுதிபோட்டியில் காலடிவைத்தது தமிழ் தலைவாஸ். பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழ் தலைவாஸ், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் கடைசி நேரத்தில் போராடி அதிர்ச்சி தோல்வியையே சந்தித்தது.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் புனேரி பல்தானும் கோப்பைக்காக மோதுகின்றன.