புரோ கபடி லீக்கில் நடப்புத் தொடரில் அறிமுகமான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
5வது புரோ கபடி லீக் தொடர் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மும்பையில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜராத் அணி முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி 42-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. குஜராத் அணியில் சச்சின் 9 புள்ளிகளும், மகேந்திர ராஜ்புத் 8 புள்ளிகளும் எடுத்தனர். நடப்புத் தொடரில் அறிமுகமான குஜராத் அணி தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற குஜராத் அணி மகுடம் சூடுமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.