விளையாட்டு

’105*, 227, 185*, 165’ மிரட்டிய பிரித்வி ஷா; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

’105*, 227, 185*, 165’ மிரட்டிய பிரித்வி ஷா; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

jagadeesh

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாவுக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது அனைவரின் எதிர்பார்ப்புமாக இருக்கிறது.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி 4-ஆவது முறையாக கோப்பை வென்றுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம் 50 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் அடித்தது. உத்தர பிரதேச அணியில் அதிகபட்சமாக மாதவ் கௌஷிக் 15 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 158 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடுத்து ஆடிய மும்பை 41.3 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து வென்றது. மும்பை இன்னிங்ஸில் ஆதித்யா தாரே 18 பவுண்டரிகள் உள்பட 118 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது. மும்பையின் கேப்டன் பிரித்வி ஷா, இந்தத் தொடரில் மொத்தமாக 827 ரன்கள் அடித்துள்ளார். இதுவரை விஜய் ஹசாரே கோப்பையில் தனியொரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும்.

இதற்கு முன்பு 2017-2018 போட்டியில் மயங்க் அகர்வால் 723 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 21 வயதான பிரித்வி ஷா, நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். பிரித்வி ஷா ஆஸ்திரேலிய தொடருக்கு சென்ற இந்திய அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அங்கு அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த ஆண்டு விஜய் ஹசாரே போட்டியில் நான்கு சதங்கள் அடித்துள்ளார் பிரித்வி ஷா. இதனால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.