விளையாட்டு

“இனி ரியல் மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”.. ஜிம்பாப்வே - பாக். அதிபர்களிடையே வார்த்தை யுத்தம்

“இனி ரியல் மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”.. ஜிம்பாப்வே - பாக். அதிபர்களிடையே வார்த்தை யுத்தம்

Rishan Vengai

டி20 உலககோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மோதிகொண்ட பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்றதையடுத்து, இரு நாட்டு பிரதமர்களும் டிவிட்டரில் கருத்து பறிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது வைரலாகி உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்தே பெரிய பலம் வாய்ந்த அணிகளை சிறிய அணிகள் பதம் பார்த்து வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் இலங்கை, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து அணிகள் முறையே நமீபியா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளிடம் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியளித்தன. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 130 ரன்கள் எடுக்க, 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரையும் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து வெளியேற்றி அதிர்ச்சியளித்தது ஜிம்பாப்வே அணி. மிடில் ஆர்டர் பேட்டர் மசூத் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பாகிஸ்தான் அணிக்கு வில்லனாக பந்துவீச வந்தார் சிக்கந்தர் ராஷா. 44 ரன்களில் மசூதை வெளியேற்றிய ராஷா, அடுத்தடுத்து சாதப் கான், ஹைதர் அலி இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி பாகிஸ்தான் கையிலிருந்த போட்டியை பிடிங்கி ஜிம்பாப்வே கைகளில் தந்தார்.

கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவை என்ற இடத்தில் முதல் மூன்று பந்துகளில் 3,4,1 என எடுத்து பாகிஸ்தான் அணியே வெற்றிபெறும் என்று நினைத்த இடத்தில் அடுத்த பந்தை டால் பாலாக வீசிய ஜிம்பாப்வே பவுலர் எவான்ஸ், பாகிஸ்தான் வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார். கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவையான இடத்தில் நவாஸ் விக்கெட்டை எடுத்து பாகிஸ்தானுக்கு பேரிடியை இறக்கியது ஜிம்பாப்வே அணி. 1 பந்துக்கு 3 ரன்கள் தேவை என்ற இடத்தில் 1 ரன் மட்டுமே விட்டுகொடுத்த ஜிம்பாப்வே அணி, 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து ஜிம்பாப்வே பிரதமர் எம்மர்சன் மங்காக்வா, டிவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டார். அந்த பதிவில், “ ஜிம்பாப்வே அணி என்ன ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. செவ்ரான்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வே பிரதமர் எம்மர்சன் மங்காக்வா பதிவை ஷேர் செய்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ம் ஒரு பதிவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” திரு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள். உங்கள் அணி இன்று நன்றாக விளையாடியது. எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களிடம் உண்மையான கிரிக்கெட் ஸ்பிரிட் இருக்கிறது. பாகிஸ்தானியர்களான எங்களிடம் திரும்ப மீண்டுவரும் வேடிக்கையான பழக்கமும் உள்ளது :) “ என்று பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் போட்டியைத்தாண்டி இரு நாட்டு பிரதமர்களும் டிவிட்டரில் கருத்து பறிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது வைரலாகி வருகிறது.

அதென்ன ஃபேக் மிஸ்டர் பீன்?

அதாவது, மிஸ்டர் பீன் என்பவர் மிகவும் பிரபலமான காமெடியன். அவரைப் போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவர் பாகிஸ்தானில் இருக்கிறார். அவரது பெயர் ஆசிப் முகமது. அவர் 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சென்று காமடி ஷோ நடத்தினார். இதனை குறிப்பிட்டுதான், ஃபேக் மிஸ்டர் பீன் என ஜிம்பாப்வே அதிபர் கருத்தை பதிவிட்டுள்ளார்.