இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.
இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட பெங்களூரு சின்னச்சாமி மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும். இன்றும் அதுபோல பேட்ஸ்மேன்களின் வான வேடிக்கைக்கு தயாராகுங்கள் என்றே வர்ணனையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மகாராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மைதானத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மைதானப் பொறுப்பாளர்கள் ஆடுகளத்தை மழைநீர் படாமல் வழக்கம்போல “கவர்” செய்தனர். ஆட்டமும் மழை நிற்கும் வரை ஒத்துவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சில நிமிடங்கள் வெளுத்து வாங்கினாலும் மைதானமே குளமாகும் அளவுக்கு மழை பெய்தது. பின்னர் மழை நின்றவுடன் அந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்றன. இதையடுத்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு ஆட்டம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 19 ஓவர்களுக்கு மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.