விளையாட்டு

'ஏழ்மையான குடும்பம், விடாமுயற்சி' - ஐபிஎல்லின் புதிய புயல் குல்தீப் சென்னின் கதை

Veeramani

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தமது தனித்திறமையாலும், விடா முயற்சியாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய புயலாக உருவெடுத்துள்ளார் இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென்.

அப்பா ராம்பால் சென் சிறிய சலூன்கடைக்காரர். ஐந்து பிள்ளைகளில் ஒருவர் இவர். பிஞ்சு பருவத்திலேயே கிரிக்கெட் மீது அவ்வளவு ஆர்வம். மத்தியப் பிரதேச மாநிலம் ஹரிஹர்புர் பகுதியை சேர்ந்த குல்தீப், 8 வயதிலேயே கிரிக்கெட் களத்தில் திறம்பட செயல்பட்டார்.



திறமையையும், கூடவே அவரது வறுமையையும் உணர்ந்த உள்ளூர் பயிற்சியாளர்கள் கட்டணம் வசூலிக்காது அவருக்கு பயிற்சி கொடுத்தனர். படிப்படியாக தம் திறமையை வளர்த்த அவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பரிணமித்தார். இதன் காரணமாக, 2018-ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பைக்கான மத்தியப்பிரதேச அணியில் இடம்பிடித்தார். தாம் பங்கேற்ற முதல் சீசனிலேயே 44 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப் சென்.

தொடர்ந்து இருபது ஓவர் போட்டிகளிலும் ஜொலிக்கத் தொடங்கினார் குல்தீப். பேட்ஸ்மேன்களை திணறடிக்கும், இவரது அவுட் ஸ்விங்கர் பந்துவீச்சும், சமயத்தில் சிக்சர்களை விளாசித் தள்ளும் இவரது பேட்டிங் ஸ்டைலும் கவனத்தை ஈர்த்தன. உள்நாட்டு டி20 தொடர்களில் 18 போட்டிகளில் பங்கேற்ற குல்தீப் சென் 12 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பலனாக, ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது.



லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். அறிமுகப் போட்டியிலேயே அசத்தல் பந்து வீச்சை வெளிப்படுத்தினார் அவர். கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 15 ரன்களே தேவை என்ற நிலையில், கச்சிதமாக வீசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்களை வீழ்த்தி, புதிய புயலாக உருவெடுத்துள்ளார் குல்தீப் சென்