விளையாட்டு

சுழற்பந்து வீச்சில் மாயாஜால வித்தை காட்டும் பூனம் யாதவ்..!

சுழற்பந்து வீச்சில் மாயாஜால வித்தை காட்டும் பூனம் யாதவ்..!

EllusamyKarthik

கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி வரை முன்னேற உதவியது சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவின் ஆட்டம். மொத்தமாக பத்து விக்கெட்டுகளை அந்த தொடரில் வீழ்த்தி, இந்திய அணியின் லீடிங் விக்கெட் டேக்கராக மாஸ் காட்டினார் அவர். 

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் பிறந்தவர். அவரது அப்பா ரகுவீர், ராணுவ வீரர். அம்மா முன்னா தேவி.
எட்டு வயதில் பூனமிற்கு கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வந்தது. மகளிர் கிரிக்கெட் இந்தியாவில் பரவலாக அறியப்படாத சமயம் அது. அதனால் சக வயது ஆண் பிள்ளைகளோடு கல்லி கிரிக்கெட் விளையாடி பழகியுள்ளார். அவர் பேட் பிடித்து விளையாட சக கல்லி கிரிக்கெட் நண்பர்கள் வாய்ப்பே கொடுக்காததால் பந்துவீசி பழகியுள்ளார்.

நாளடைவில் கும்ப்ளே ஸ்டைலில் லெக்-பிரேக் வீசுவதை தனக்கான தனிச்சிறப்பாக மாற்றிக் கொண்டார். அதன் பலனாக பள்ளி அளவிலான மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு வந்தது.

அப்படியே பள்ளி, வட்டம், மாவட்டம் என உத்திர பிரதேச மாநில கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சுழற் பந்து வீச்சாளராக உருவெடுத்தார். பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் கம்பேக் கொடுத்தார். இந்த முறை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடினார். அதன் பலனாக 2013இல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற டி20 தொடரிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

ஒரு சுழற் பந்து பவுலருக்கு தேவையான சகல வித்தைகளையும் தன் பந்துவீச்சில் காட்டி எதிரணியின் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்தார். பந்தை டாஸ் செய்து வீசுவது, கூக்ளி வீசுவது, வைட் லெந்தில் வீசுவது, ஸ்கிட் செய்து வீசுவது என பந்து வீச்சில் வெரைட்டி காட்டுபவர்.

சர்வதேச அளவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி வரும் பூனம் மொத்தமாக 167 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் கேப்டன்கள் மித்தாலி ராஜ் (ஒருநாள்) மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் (டி20) தலைமையின் கீழ் கிரிக்கெட்டில் கோலோச்சி வருகிறார் பூனம்.

கடந்தாண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற மைல்கல்லை எட்டினார்.
மகளீர் உலக கோப்பை டி20 தொடரில் காயத்திற்கு பிறகு அணிக்குள் என்ட்ரி கொடுத்தவர் லீக் போட்டிகளில் மட்டுமே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
‘பூனம் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் பெண் பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக மாறியுள்ளாள். விளையாடுவதற்கான திறனிருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை அவள் ஆட்டம் உருவாக்கியுள்ளது’ என்கிறார் அவரது பால்ய கால சுழற்பந்து பயிற்சியாளர் ஹேமலதா.