டைகர் ராபி x page
விளையாட்டு

வங்கதேச ரசிகர்மீது தாக்குதல்?| ராபி இந்தியாவுக்கு வந்தது ஏன்? போலீஸ் விசாரணையில் முக்கியத் தகவல்!

வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், போலீஸ் விசாரணையில் முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், தற்போது இவ்விரு அணிகளும் கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன.

இதில் நேற்று முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி, 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் கனமழை பிடித்ததால் முதல்நாள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்றும் மழை பெய்வதால் 2-வது நாள் போட்டியும் கைவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தப் போட்டியைக் காண வந்த வங்கதேச 'சூப்பர் ஃபேன்' டைகர் ராபி மீது இந்திய ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. ஆனால் இந்தச் சம்பவத்தை போலீசார் மறுத்திருந்தனர். இதுகுறித்து கல்யாண்பூர் ஏசிபி அபிஷேக் பாண்டே, “நீரிழப்பு காரணமாக அவர் சரிந்து விழுந்தார். போலீஸாரும் மருத்துவ ஊழியர்களும் உடனடியாக அவருக்கு உதவினர். மேலும் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இப்போது நலமுடன் உள்ளார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது முற்றிலும் ஆதாரமற்றது; அவர் எந்த ரசிகராலும் தாக்கப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரியவந்துள்ளன, அவர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், மருத்துவ விசாவில் இந்தியா வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: ஹிஸ்புல்லா தலைவர் மரணம்... யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? இஸ்ரேலை வீழ்த்த தயாராகும் அடுத்த தலைவர்.. ?

”சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போதும் ராபி கலந்துகொண்டுள்ளார். அப்போது, இந்திய வீரர்களை, அவர் கடுமையாகத் திட்டியுள்ளார். குறிப்பாக முகமது சிராஜை மோசமான முறையில் திட்டியுள்ளார். அப்போது அருகிலிருந்த ரசிகர்கள் யாருக்கும் வங்க மொழி தெரியாததால் அவர்கள் ராபியை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் கான்பூரில் உள்ளவர்களுக்கு வங்க மொழி தெரியும்” என வங்கதேச பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்துதான் அவர், கான்பூர் கிரிக்கெட் போட்டியையும் கண்டுகளித்துள்ளார்.

இந்த நிலையில்தான், அவர் நீரிழப்பு காரணமாக மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதை ஸ்டேடியத்தில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர், ”ராபி வருவதற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும், மைதானத்தின் சி-அப்பர் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தபோது வெப்பம் காரணமாக மயக்கமடைந்தார்” எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில்தான் இதுதொடர்பாக போலீஸார் அவரைப்பற்றி தீவிரமாக விசாரித்துள்ளனர். அந்த வகையில்தான் தற்போது அவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹரிஷ் சந்தர், பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், "ராபி நுரையீரலைக் கடுமையாகப் பாதிக்கும் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்தச் சிகிச்சைக்காகவே அவர் இந்தியா வந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவரது விசா மற்றும் இந்தியாவிற்குள் பயண நடவடிக்கைகள் குறித்து மேலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ராபி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க தேர்தல்|கூகுள் மீது குற்றச்சாட்டு.. அதிபரான பின்பு வழக்கு.. அதிரடி முடிவெடுத்த ட்ரம்ப்!